புலம்பெயர்ந்தோரை கடலில் தள்ளிக்கொன்ற கடலோரக் காவல் படையினர்: பதறவைக்கும் செய்தி
புலம்பெயர்ந்தோரை கடலில் தள்ளிக் கொன்றதாக கிரீஸ் நாட்டு கடலோரக் காவல் படையினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
43 உயிர் பலிகள்
2020ஆம் ஆண்டு மே மாதத்திற்கும், 2023ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் இடையில் மட்டும், இவ்வித 15 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதாவது, கிரீஸ் நாட்டு கடலோரக் காவல் படையினர், புலம்பெயர்வோரை கடலுக்குள் தள்ளி விட்ட சம்பவங்கள். இந்த சம்பவங்களில் 43 புலம்பெயர்ந்தோர் பலியாகியுள்ளார்கள்.
இவற்றில் ஐந்து சம்பவங்களில் உயிர் பிழைத்த புலம்பெயர்வோர், தங்களை கிரீஸ் அதிகாரிகள் நேரடியாக கடலுக்குள் தள்ளிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள். நான்கு சம்பவங்களில், கடலில் விழுந்தோர் நீந்தி கிரீஸ் தீவை அடைந்தபோது, அங்கிருந்த அதிகாரிகள் அவர்களைத் துரத்தியடித்துள்ளார்கள். சில சந்தர்ப்பங்களில், சரியாக காற்றடைக்கப்படாத அல்லது பஞ்சர் செய்யப்பட்ட, மோட்டார் இல்லாத ரப்பர் படகுகளில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளார்கள் புலம்பெயர்ந்தோர்.
கண்ணால் கண்ட சாட்சிகள்
இந்த பயங்கர சம்பவங்கள் குறித்து, உயிர் பிழைத்தவர்கள் சாட்சியமளிக்க பயந்திருந்த நிலையில், அவர்களில் சிலர், தற்போது சாட்சியமளிக்க முன்வந்துள்ளார்கள். குறிப்பாக, கேமரூன் நாட்டவரான ஒருவர், கிரீஸ் நாட்டில் புகலிடம் கோர முயன்றபோது கிரீஸ் அதிகாரிகளால் தங்களுக்கு நேர்ந்த பயங்கரத்தை விவரிப்பதைக் கேட்டால் நடுக்கம் ஏற்படுகிறது.
நாங்கள் படகில் ஏறி கொஞ்சம் தூரம்தான் சென்றிருப்போம். அப்போது பின்னால் கிரீஸ் நாட்டு பொலிசார் எங்களைத் துரத்திக்கொண்டு வந்தார்கள். கண்கள் மட்டும் வெளியே தெரியும் வகையில் முகமூடி அணிந்திருந்த அந்த பொலிசார், கடலோரக் காவல் படையின் படகில் எங்களை ஏற்றிக்கொண்டார்கள்.
ஏதோ நல்லது நடக்கப்போகிறது என நாங்கள் எண்ணிக்கொண்டிருக்க, திடீரென, என்னுடன் வந்த என் நாட்டவரை தூக்கி கடலில் வீசினார்கள் பொலிசார். அவர் ’ நான் சாகவிரும்பவில்லை, என்னைக் காப்பாற்றுங்கள்’ என கதறினார்.
கொஞ்சம் நேரத்தில் அவர் கை மட்டுமே தண்ணீருக்கு மேல் தெரிந்தது, பிறகு அவரது கையையும் காணவில்லை, என் கண்களுக்கு முன்பாகவே அவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார் என்கிறார்.
பின்னர், லைஃப் ஜாக்கெட் கூட இல்லாமல், இந்த நபரையும் அடித்து, தண்ணீரில் தள்ளியிருக்கிறார்கள் கிரீஸ் நாட்டு கடலோரக் காவல் படையினர்.
அவர் எப்படியோ கஷ்டப்பட்டு நீந்தி கரைக்கு வந்து பார்த்தால், அவருடன் வந்த இன்னும் இருவர் துருக்கிக் கடற்கரையில் சடலங்களாகக் கிடந்தார்களாம்.
அவரது சட்டத்தரணிகள், இந்த விடயம் தொடர்பாக இரட்டைக் கொலை வழக்கு ஒன்றைத் துவக்குமாறு கிரீஸ் அதிகாரிகளை வலியுறுத்திவருகிறார்கள்.