சித்திரையில் பிறந்தால் ஆகாது.., பிறந்து 38 நாட்களே ஆன பேரக்குழந்தையை கொன்ற தாத்தா
பிறந்து 38 நாட்களே ஆனகுழந்தையை மூட நம்பிக்கையால் தாத்தாவே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூட நம்பிக்கை
தமிழக மாவட்டமான அரியலூர், உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்த தம்பதியினர் வீரமுத்து (58) மற்றும் ரேவதி. இவரது மகள் சங்கீதாவுக்கு பாலமுருகன் என்பவருடன் திருமணம் ஆனது.
இந்நிலையில், கடந்த மாதம் தான் சங்கீதாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சாத்விக் என்று பெயரும் வைத்தனர். இதனால், தனது பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் சங்கீதா இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 14 -ம் திகதி அதிகாலையில் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு சங்கீதாவும் தூங்கிவிட்டார். பின்னர், காலை எழுந்து பார்த்த போது தண்ணீர் பேரலில் குழந்தை இறந்து கிடந்துள்ளது.
இதுதொடர்பாக, குழந்தையின் தாத்தா வீரமுத்து மீது சந்தேகம் ஏற்பட்டதால் பொலிஸார் அவரை தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது தான் பிறந்து 38 நாட்கள் ஆன குழந்தையை தாத்தா வீரமுத்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும், “சித்திரையில் பிறந்ததால் குடும்பத்திற்கு ஆகாது என்று கொன்றேன்” என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். பின்னர், பொலிஸார் அவரை கைது செய்தனர்.