இயற்கை உபாதைகளை கழிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நதியில் பிரம்மாண்ட ஒத்திகை
ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரெஞ்சு நதி ஒன்றை சுத்தம் செய்ய பிரான்ஸ் அரசு கோடிக்கணக்கில் செலவு செய்ய திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நதியில் இயற்கை உபாதைகளைக் கழிக்க எதிர்ப்பாளர்கள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள விடயம் நினைவிருக்கலாம்.
ஒலிம்பிக் செலவுகளுக்கு எதிர்ப்பு
பிரன்ஸ் தலைநகர் பாரீஸில், ஜூலை மாதம் முதல், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், நீச்சல் போட்டிகளுக்காக Seine நதியை சுத்தம் செய்ய பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்துக்காக 1.2 பில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட உள்ளன.
இவ்வளவு பெரிய தொகையை, நதியை சுத்தம் செய்வதற்காக அரசு ஒதுக்கியுள்ள விடயம் பொதுமக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில், நதியின் சுத்தத்தைக் காட்டும் வகையில், ஜூன் மாதம் 23ஆம் திகதி, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும், பாரீஸ் மேயர் Anne Hidalgoவும், Seine நதியில் நீந்த திட்டமிட்டுள்ளார்கள்.
பெரும் தொகையை ஒலிம்பிக் போட்டிகளுக்காக நதியை சுத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் எதிர்ப்பாளர்கள், பிரான்ஸ் ஜனாதிபதியும், பாரீஸ் மேயரும் Seine நதியில் நீந்த திட்டமிட்டுள்ள அதே நாளில், நதியில் இயற்கை உபாதைகளைக் கழிக்கவருமாறு பொதுமக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்கள். அதற்கு இன்னும் சில நாட்கள்தான் உள்ளன!
பிரம்மாண்ட ஒத்திகை
இந்நிலையில், பிரான்சுக்கு சுற்றுலா வந்தவர்கள், இதென்ன ஏதோ பிரம்மாண்ட திரைப்படம் எடுக்கிறார்களா என வியந்து பார்க்கும் வகையில், ஏராளம் படகுகள் Seine நதியில் வலம் வந்தன.
விடயம் என்னவென்றால், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஒலிம்பிக் போட்டிகளின் துவக்கவிழா, முதன்முறையாக விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு பதிலாக, Seine நதியில் நடைபெற உள்ளது.
ஜூலை மாதம் 26ஆம் திகதி, ஒலிம்பிக் போட்டிகளின் துவக்கவிழாவின்போது, Seine நதியில் சுமார் 160 படகுகளில் சுமார் 10,500 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பவனி வர உள்ளார்கள்.
அதற்காகத்தான் தற்போது 55 படகுகள், பொலிசாரின் 10 விரைவுப்படகுகள் முன்னே அணிவகுத்துச் செல்ல, தொலைக்காட்சி கமெராக்களுடன் சில படகுகள் பின்தொடர ஒத்திகை அணிவகுப்பு நடத்தின, அத்துடன், ஒத்திகை வெற்றிகரமாகவும் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.