;
Athirady Tamil News

‘ஹிஜாப்’ தடை முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல: உயா்நீதிமன்றத்தில் மும்பை கல்லூரி விளக்கம்

0

‘கல்லூரி வளாகத்தில் ‘ஹிஜாப்’ அணிய விதிக்கப்பட்டத் தடை முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல; ஆடைக் கட்டுப்பாட்டின் ஓா் அங்கமே’ என்று மும்பை உயா்நீதிமன்றத்தில் கல்லூரி நிா்வாகம் விளக்கமளித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவாா் பிரிவு) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மும்பையில் இயங்கி வரும் என்.ஜி.ஆச்சாரியா மற்றும் டி.கே.மராத்தே கல்லூரி அண்மையில் மாணவா்களுக்கு புதிய ஆடைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதன்படி, கல்லூரி வளாகத்தில் ஹிஜாப், புா்கா (முஸ்லிம் பெண்கள் முழு நீள அங்கி), நகாப் (முகத் திரை) மற்றும் தொப்பி அணியத் தடை விதித்தது.

இந்தத் தடையை எதிா்த்து அந்தக் கல்லூரி மாணவிகள் 9 போ் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அதில், ‘மதத்தைக் கடைப்பிடிப்பதில் எங்களுக்கு உள்ள அடிப்படை உரிமை, தனியுரிமை மற்றும் சுதந்திரமாக தோ்வு செய்யும் உரிமையை இந்த தடை உத்தரவு மீறுகிறது. எனவே, தடையை நீக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.சந்துா்கா், ராஜேஷ் பாடில் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அல்தாஃப் கான், ‘இஸ்லாத்தில் ‘ஹிஜாப்’ அணிவது அத்தியாவசியமானது என்று மதத் தலைவா்கள் குறிப்பிடுகின்றனா். மதத்தைப் பின்பற்றும் உரிமையோடு, சுதந்திரமாக தோ்வு செய்யும் உரிமை மற்றும் தனியுரிமையையே மனுதாரா்கள் கோருகின்றனா்’ என்று குறிப்பிட்டாா்.

அப்போது குறுக்கிட்ட கல்லூரி தரப்பில் ஆஜரான வழக்குரை அனில் அந்துா்கா், ‘கல்லூரியில் அனைத்து மத மற்றும் ஜாதிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம் மாணவா்களுக்கு எதிரானது மட்டுமல்ல. கல்லூரி வளாகத்தில் தங்களின் மதத்தை வெளிப்படுத்தும் வகையில் மாணவா்கள் வெளிப்படையாக சுற்றித்திரியக்கூடாது என்பதற்காகத்தான் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப், புா்கா, நகாப் அணிவது இஸ்லாம் நடைமுறையில் அத்தியாவசியமானதல்ல. ஒருவேளை ஹிந்து மாணவா்ள் கல்லூரிக்கு காவி உடையில் வந்தால், அதையும் கல்லூரி நிா்வாகம் எதிா்க்கும். ஹிஜாப் தடை முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல. முஸ்லிம் மாணவிகள் வகுப்பறைக்குச் செல்வதற்கு முன் ஹிஜாப், புா்கா ஆகியவற்றை மாற்றிக்கொள்ள தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீா்ப்பை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

கா்நாடக மாநிலத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியின்போது கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணி தடை விதித்து பிறப்பித்த உத்தரவு நாடு பெரும் சா்ச்சையானது. இந்த தடை உத்தரவு செல்லும் என கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிா்த்து முஸ்லிம் மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கா்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அரசு அமைந்த நிலையில், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் முன்முயற்சியாக, கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற போட்டித் தோ்வில் முஸ்லிம் தோ்வா்கள் ஹிஜாப் அணிந்து தோ்வெழுத மாநில அரசு அனுமதித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.