இந்திய வீடமைப்புத் திட்டத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி (Kandy), நுவரெலியா (Nuwara Eliya) மற்றும் மாத்தளை (Mattala) ஆகிய மாவட்டங்களில் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (S. Jaishankar) திறந்து வைத்துள்ளனர்
குறித்த நிகழ்வானது இன்றைய தினம் (20) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள எஸ்.ஜெய்சங்கர், அதிபர் மாளிகையில் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்த பின்னர் இவர்கள் கூட்டாக இதனை திறந்து வைத்துள்ளனர்.
கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு
இதனடிப்படையில், கொழும்பு (Colombo) மற்றும் திருகோணமலை (Trincomalee) ஆகிய நகர்களிலுள்ள மாதிரிக் கிராமத்திலும் 24 வீடுகள் மெய்நிகர் ஊடாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, ஆறு மில்லியன் டொலர் இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (MRCC) உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதைக் குறிக்கும் நினைவுப் படிகம் மெய்நிகர் ஊடாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஒரு மையம், ஹம்பாந்தோட்டையில் (Hambantota) துணை மையம், காலி (Galle), அருகம்பே (Arugam Bay) , மட்டக்களப்பு (Batticaloa), திருகோணமலை, கல்லாறு, பருத்தித்துறை மற்றும் மொல்லிக்குளம் ஆகிய பிரதேசங்களின் ஆள்ளில்லா கட்டுப்பாட்டு மையங்களும் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.