6,300 பேரை நாடுகடத்திய ஜேர்மனி: அச்சத்தில் வேறொரு நாட்டிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர்
ஜேர்மனி, புலம்பெயர்தல் விதிகளைக் கடுமையாக்கியுள்ளதால், அந்நாட்டில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோர் வேறொரு நாட்டுக்குள் நுழையும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். அந்த நாடு பிரித்தானியா!
6,300 பேரை நாடுகடத்திய ஜேர்மனி
ஒரு காலத்தில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை இருகரம் நீட்டி வரவேற்ற ஜேர்மனியில், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
எதிர்க்கட்சிகள் மற்றும் அவர்களை ஆதரிக்கும் மக்களின் அழுத்தத்திற்கு அஞ்சி, ஆளும் அரசு கடுமையான புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளது.
அதன்படி, புகலிடக்கோரிக்கைகளை வேகமாக பரிசீலிக்கத் துவங்கியுள்ள அதே நேரத்தில், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவதும் அதிகரித்துள்ளது.
ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் ஜேர்மனியிலிருந்து 6,300 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்.
பரபரப்பாக அதிகாலை 3.00 மணிக்கே புகலிடக்கோரிக்கையாளர்கள் வீடுகளில் ரெய்டுகள் மேற்கொள்ளும் அதிகாரிகள், அவர்களை நாடுகடத்திவருவதாக கூறும் புலம்பெயர்ந்தோரில் சிலர், நாங்கள் ஒரு தவறும் செய்யவில்லை, ஜேர்மன் மொழி கற்கும் முயற்சியைக் கூட துவங்கியுள்ளோம்.
ஆனால், எங்கள் நாடுகள் பாதுகாப்பானவை எனக்கூறி, எங்களை எங்கள் நாடுகளுக்கு நாடுகடத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது ஜேர்மனி என்கிறார்கள்.
வேறொரு நாட்டிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர்
ஜேர்மனியில் புலம்பெயர்தல் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
சிலர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிட்டார்கள், சிலர் பிரான்ஸ் கடற்கரையில் படகுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர், ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் தனது முந்தைய முயற்சியின்போது, பிரான்ஸ் பொலிசார் தங்கள் ரப்பர் படகைக் கிழித்துவிட்டதால் தங்களால் பயணிக்க முடியாமல் போய்விட்டது என்றும், அடுத்த தருணத்துக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
பிரித்தானியா தங்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தினால் கூட பரவாயில்லை, தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிப் போகமுடியாது என்று கூறும் சிலர், பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.