கனடா எடுத்துள்ள ஒற்றை முடிவு: சிக்கலில் 6,000 வேலைவாய்ப்புகள்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் குறைந்து வரும் பசிபிக் சால்மன் மீன்களின் எண்ணிக்கையைப் பாதுகாக்க உதவும் பொருட்டு முக்கிய முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சால்மன் பண்ணைகள் தடை
இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடலுக்குள் கூண்டு அல்லது வலை ஊடாக முன்னெடுக்கப்படும் சால்மன் பண்ணைகளை தடை செய்ய இருப்பதாக பெடரல் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த முடிவினை சுற்றுச்சூழல் குழுக்கள் வரவேற்றாலும் மீன் வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுவோரால் எதிர்க்கப்பட்டு வருகிறது. சால்மன் மீனானது கனடாவின் மேற்கு கடற்கரையில் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இனமாகும்.
ஆனால் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள 9,000 தனித்துவமான இனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் டசின் கணக்கான கூண்டு அல்லது வலைக்குள் வளர்க்கப்படும் சால்மன் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. மட்டுமின்றி, இதன் காரணமாக காட்டு மீன்களுக்கு நோய் பரவும் ஆபத்து இருப்பதாக ஆர்வலர்களால் பரப்புரை முன்னெடுக்கப்பட்டது.
6,000 வேலை வாய்ப்புகள் பாதிப்பு
இந்த நிலையிலேயே, 2019ல் இதுபோன்ற பண்ணைகளை 2025க்குள் தடை செய்யப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார். ஆனால் தற்போது 2029 மத்தியில் மொத்தமாக தடை செய்யப்படும் என்பதை ட்ரூடோ அரசாங்கம் அறிவித்துள்ளது.
சால்மன் பண்ணைகளை தடை செய்வதால் மொத்தமாக 6,000 வேலை வாய்ப்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறுகின்றனர். மட்டுமின்றி, ஆண்டுக்கு 1.2 பில்லியன் கனேடிய டொலர் திரட்டப்பட்டு வந்த இந்த வணிகம் இனி தடை செய்யப்படுவதால், மாகாண பொருளாதாரத்தை பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.
மேலும், இதுபோன்ற பண்ணைகளை பூர்வகுடி மக்கள் மற்றும் கடற்கரையில் வாழும் சமுக மக்களே தொழில் ரீதியாக முன்னெடுத்து வருகின்றனர்.
இதனையடுத்து தடையை முன்னிட்டு ஜூலை இறுதிக்குள் சால்மன் மீன் வளர்ப்பு மாற்றம் எதிர்கால திட்டத்தை வெளியிட அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.