;
Athirady Tamil News

கள்ளச்சாராயம் குடித்து ஜிப்மரில் சிகிச்சைபெறும் 16 பேர் கவலைக்கிடம்!

0

புதுச்சேரி: கள்ளச்சாராயம் குடித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணி (எ) சுப்பிரமணி (45), குப்பன் மனைவி இந்திரா (48), சின்ன ஏட்டு மகன் கிருஷ்ணமூர்த்தி (62) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில், கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 19 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், 16 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஜிப்மர் மருத்துவமனையில் நேற்று கள்ளச்சாராயம் குடித்து 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை அறிக்கை
மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவ குழுக்களால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் என பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், வியாழக்கிழமையும் சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் 39 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 70-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

முன்னதாக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை முன் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சிகிச்சைப் பெற்று வருபவர்களின் உறவினர்கள் புதன்கிழமை இரவு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து, கள்ளச்சாராய வியாபாரிகள் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, தாமோதரன் ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.