முல்லைத்தீவு வான் பரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்மப்பொருட்கள் தொடர்பில் விசாரணை
முல்லைத்தீவு வான் பரப்பில் தென்பட்ட இரண்டு மர்மப் பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு வான் பரப்பில் இரண்டு மர்மப் பொருட்கள் கடந்த 19 ஆம் திகதி தென்பட்டதாக முல்லைத்தீவு மீனவர்கள் 20 ஆம் திகதி (நேற்று) தெரிவித்துள்ளனர்.
நீல நிறத்தில் உள்ள இந்த இரண்டு மர்மப் பொருட்களும் வானில் மெதுவாக மிதந்து வருவதாகவும், வவுனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னர் அவை தென்படுவதாகவும் கூறியுள்ளனர்.
சுனாமி அனர்த்தம்
வானத்தில் மெதுவாக மிதக்கும் இரண்டு பொருட்களும் நீல நிறத்தில் மிகவும் பிரகாசமாக காணப்படுவதாகவும், அந்த இரண்டு மர்மப் பொருட்களும் நிலப்பரப்பை விட கடலில் நன்றாகவே காணப்படுவதாகவும் நேரில் பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.
சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் இதே போன்ற பல பொருட்கள் வானில் மிதந்ததாகவும், சுனாமியின் பின்னர் அவை காணாமல்போயிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்விரு மர்மப் பொருட்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மர்மப்பொருட்கள் தொடர்பில் விசாரணை
இதற்கமைய, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விவரங்களை அவர்கள் கொழும்பில் சமர்ப்பித்துள்ளதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.