;
Athirady Tamil News

20 ஆண்டு சம்பளம்…வேலையே இல்லை! பிரான்ஸ் பெண்மணி தொடுத்த வழக்கு

0

பணி எதுவும் தராமல் ஊதியம் மட்டும் வழங்கி வந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஊழியர் வழக்கு தொடுத்துள்ளார்.

நிறுவனத்தின் மீது வழக்கு
பிரான்சைச் சேர்ந்த ஊனமுற்ற பெண் ஒருவர், தனக்கு எந்த வேலையும் வழங்காமல் முழு சம்பளத்தை 20 ஆண்டுகளாக வழங்கி வந்த முன்னாள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

லாரன்ஸ் வான் வாசென்ஹோவ் என்ற அந்த பெண், தொலைத்தொடர்பு நிறுவனமான ஆரஞ்சு நிறுவனத்தின் மீது பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

1993 ஆம் ஆண்டில் பிரான்ஸ் டெலிகாம் நிறுவனத்தில் (ஆரஞ்சு நிறுவனத்தால் கையகப்படுத்தப்படுவதற்கு முன்பு) பணியில் சேர்ந்த வான் வாசென்ஹோவ், உடல் பாதிப்பு (ஒரு பக்கம் முடக்குவாதம்) மற்றும் நோய்வாய்ப்படுதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஏற்ற பணிகளை நிறுவனம் வழங்கியது. செயலாளர் மற்றும் மனிதவளத் துறைகளில் 2002 ஆம் ஆண்டு வரை அவர் பணியாற்றினார்.

மறுக்கப்பட்ட இடமாற்ற கோரிக்கை


பிரான்சின் மற்றொரு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என 2002 ஆம் ஆண்டில் வான் வாசென்ஹோவ் கோரிக்கை வைத்தார்.

ஆனால், புதிய பணிச்சூழல் அவருக்கு ஏற்றதாக இல்லை. இதற்கு ஏற்ப வேலை சூழலை மாற்றியமைக்க ஆரஞ்ச் நிறுவனம் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

முழு சம்பளத்தையும் வான் வாசென்ஹோவ்வுக்கு தொடர்ந்து வழங்கிய ஆரஞ்ச் நிறுவனம், அவருக்கு எந்த வேலையும் வழங்கவில்லை என அவர் குற்றம் சாட்டுகிறார்.

பணி நீக்கம் செய்யாமல் அவரை நிறுவனத்திலிருந்து வெளியேற்றுவதற்கான திட்டமிட்ட நடவடிக்கை இது என அவர் நம்புகிறார்.

வேலை செய்யாமல் சம்பளம் பெறுவது பலருக்கு கனவு போல் தோன்றலாம். ஆனால், இந்த 20 ஆண்டுகளாக எந்த வேலையும் இல்லாமல் வீட்டில் இருப்பது தாங்க முடியாத கஷ்டம் என வான் வாசென்ஹோவ் கூறுகிறார்.

தனிமைப்படுத்தப்பட்டதால் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டில் அரசு மற்றும் பாகுபாடு தடுப்புக்கான உயர் அதிகாரி ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பிரச்சனையை தீர்க்க ஒரு மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டார். இருப்பினும், இந்த நடவடிக்கைக்குப் பிறகும் அவரது நிலைமை மாறவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.