அதிகரிக்கும் பிறப்புறுப்பு புற்றுநோய்… ஒரே நாட்டில் 6500 பேர்களுக்கு உறுப்பு நீக்கம்
மிக அரிதானதாக கருதப்படும் ஆணுறுப்பு புற்றுநோய் தற்போது உலக அளவில் அதிகரித்து வருவதாகவும், ஒரே நாட்டில் சுமார் 6500 பேர்கள் உறுப்பு நீக்கம் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிறப்புறுப்பு புற்றுநோய்
பிரேசில் நாட்டில் கடந்த 2018ல் ஜோவோ என்ற 63 வயது நபர் தமது பிறப்புறுப்பில் புண் காணப்பட்டதை அடுத்து மருத்துவர்களை நாடியுள்ளார். ஆனால் அவர் சந்தித்த அனைத்து மருத்துவர்களும் அதன் காரணத்தை உறுதி செய்ய முடியாமல் திணறியுள்ளனர்.
தொடர்ந்து 5 ஆண்டுகள் சிகிச்சை முன்னெடுத்தும் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், 2023ல் அவருக்கு பிறப்புறுப்பு புற்றுநோய் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பிறப்புறுப்பு நீக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில், ஆண்களுக்கு பிறப்புறுப்பு புற்றுநோய் அதிகமாக காணப்படும் நாடுகளில் ஒன்றாக பிரேசில் மாறியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
2012 முதல் 2022 வரையான காலகட்டத்தில் 21,000 ஆண்கள் பிறப்புறுப்பு புற்றுநோய் பாதிப்புக்கு இலக்கானதாக பதிவாகியுள்ளது. மட்டுமின்றி இறப்பு எண்ணிக்கை 4,000 கடந்துள்ளதாகவும், பிறப்புறுப்பு நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,500 கடந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதாவது ஒவ்வொரு இரண்டு நாளுக்கும் ஒருவருக்கு உறுப்பு நீக்க அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டிலேயே மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் மாகாணமான Maranhão-ல் பிறப்புறுப்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உலகிலேயே மிக அதிகம் என்று கூறப்படுகிறது.
முதலிடத்தில் உகாண்டா
இங்கு 100,000 ஆண்களில் 6 பேர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகை புற்றுநோயின் அறிகுறிகள் என்பது பெரும்பாலும் குணமடையாத புண் மற்றும் கடுமையான ஒருவகை வாசனை இருக்கும் என்றே கூறுகின்றனர்.
சிலருக்கு ரத்தக்கசிவும் நிறத்தில் மாற்றமும் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். 2008 முதல் 2012 வரையான ஆய்வுகளின் அடிப்படையில் உகாண்டாவில் ஆண் பிறப்புறுப்பு புற்றுநோய் அதிகம் என்றும், இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளதாகவும்,
மூன்றாவது இடத்தில் தாய்லாந்து, அடுத்து குவைத் நாடு இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் ஆண் பிறப்புறுப்பு புற்றுநோய் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
1979 முதல் 2009 வரையான ஆய்வுகளின் அடிப்படையில் பிரித்தானியாவில் தற்போது இந்த வகை புற்றுநோய் அதிகரித்து காணப்படுகிறது. ஜேர்மனியில் 50 சதவிகித அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
2050ல் உலக அளவில் ஆண் பிறப்புறுப்பு புற்றுநோய் எண்ணிக்கை 77 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 60 வயது கடந்தவர்களில் இது அதிகமாக காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.