யாழில் பணத்தை காலால் மிதித்த வர்த்தகர்: பொலிஸ் தலைமையகத்தில் வழங்கிய உத்தரவு
இலங்கையில் புழக்கத்தில் உள்ள நாணயத்தாள்களை காலில் போட்டு மிதித்து காணொளியில் கருத்து கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நபர் மீது யாழ்ப்பாணம் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த நபரொருவர், தனது சட்டை பையில் இருந்த பெருமளவான ஐந்து ஆயிரம் ரூபாய் தாள்களை எடுத்து நிலத்தில் போட்டு சப்பாத்து காலால் மிதித்த படி நின்று கருத்து தெரிவித்தார்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து குறித்த நபருக்கு பெருமளவானோர் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்ததுடன் கண்டனங்களையும் பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்றையதினம் குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 55ஆம் பிரிவின் நியதிகளில் இலங்கை மத்திய வங்கியினது ஆளுகைச் சபையின் அதிகாரமின்றி எந்தவொரு நபரும், நாணய தாள்களை வெட்டுதல், துளையிடுதல் அல்லது வேறு ஏதேனும் வழிகளில் எந்தவொரு நாணயத்தினையும் உருச் சிதைத்தல்; எந்தவொரு நாணயத் தாளிலும் அச்சிடுதல், முத்திரை பதித்தல் அல்லது எதனையும் வரைதல் அல்லது எந்தவொரு நாணயத் தாள்களின் மீதும் ஏதாவது சீல் அல்லது முத்திரைகளை ஒட்டுதல்; ஏதேனும் நாணயத் தாளின் மீது விளம்பரமொன்றின் தன்மையையொத்த அல்லது வடிவத்தினை இணைத்தல் அல்லது ஒட்டுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.