பொது ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
ஒரு பொது ஊழியருக்கு எந்தவொரு ஓய்வூதியம் அல்லது கொடுப்பனவுகளுக்கும் முழுமையான உரிமை இல்லை என்று இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், ஓய்வூதியம் பெற மனுதாரர்கள் நீதித்துறை உத்தரவை கோர முடியாது எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஓய்வூதிய முரண்பாடுகள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை, தமது ஓய்வூதிய உயர்வை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யும் உத்தரவைப் பிறப்பிக்க கோரி ஓய்வூதியதாரர்கள் குழு தாக்கல் செய்த நீதிப்பேராணை மனுவை பரிசீலித்த நிலையிலேயே, மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஓய்வுபெற்ற பணியாளர்கள்
அதேவேளை, இந்த மனுவில், மனுதாரர்கள் தங்களுக்கு உரிமையுள்ள சட்டபூர்வ உரிமையை பிரதிவாதிகள் மீறியுள்ளனர் என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டனர் என்றும் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நீதியரசர்களான சம்பத் விஜேரத்ன மற்றும் அக்சன் மரிக்கார் ஆகியோரின் அமர்வு, மனுவை தள்ளுபடி செய்வதற்கான அதன் முடிவை விளக்குவதற்கு, கடந்த காலத்தின் பல தீர்ப்புகளை மேற்கோள் காட்டியுள்ளது.
இதில், எம்.கே.பி. ஹேரத் எதிர் ஜகத் டி டயஸ் மற்றும் குணவர்தன எதிர் சட்டமா அதிபர் ஆகிய வழக்குகளின் தீர்ப்புக்களும் அடங்குகின்றன.
அது மாத்திரமன்றி, நீதித்துறை அரசாங்க கொள்கையில் செல்வாக்கு செலுத்த முடியாது என்று இந்திய நீதிமன்றங்கள் வழங்கிய இரண்டு தீர்ப்புகளையும், மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கோள் காட்டியுள்ளது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற பணியாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் மகிந்த ஜயசிங்க உள்ளிட்ட 94 மனுதாரர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஓய்வூதிய முரண்பாடுகள் பிரச்சினை தீர்க்கப்படும் வரை ஓய்வூதிய அதிகரிப்பை இடைநிறுத்தி 2020 ஜனவரி 20ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றே மனுதாரர்கள் அவர்கள் தமது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.