நெருங்கும் தேர்தல்… இன்னொரு சிக்கலில் ரிஷி சுனக்: விசாரணையில் நான்காவது நபர்
தேர்தல் திகதி சூதாட்டம் தொடர்பில் ரிஷி சுனக் கட்சியின் பொறுப்பாளர் ஒருவர் மீண்டும் விசாரணை வட்டத்தில் சிக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
சூதாட்ட குற்றச்சாட்டில் விசாரணை
பிரித்தானிய பொதுத் தேர்தல் திகதி உத்தியோகப்பூர்வமாக இதுவரை வெளியாகாத நிலையில், தேர்தல் திகதி தொடர்பில் அந்த நபர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தல் வேட்பாளர்கள் இருவர் மீது சூதாட்ட குற்றச்சாட்டில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கனசர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் பரப்புரை பொறுப்பாளரும் சூதாட்டம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஏற்கனவே வெற்றிவாய்ப்பு மிக மிக குறைவு என கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், ரிஷி சுனக் கட்சி உறுப்பினர்கள் முறைகேடுகளில் சிக்கி வருவது அவருக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் லேபர் கட்சி இந்த முறை வரலாறு படைக்கும் என்றே பல்வேறு கருத்துக்கணிப்புகளில் குறிப்பிடப்படுகிறது. தற்போது, நான்காவதாக சூதாட்ட விசாரணையில் சிக்கியவர் Nick Mason என்றும், இவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் முதன்மை தரவுகள் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் தீவிரமான விடயம்
இந்த விவகாரம் தொடர்பில் Nick Mason இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், Nick Mason தவறேதும் செய்யவில்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அவர் விடுப்புக்கு சென்றது தொடர்பில் பதிலளிக்க மறுத்துள்ளனர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் தமது அதிருப்தியை கடுமையாக வெளிப்படுத்தியுள்ள பிரதமர் ரிஷி சுனக், இது மிகவும் தீவிரமான விடயம் என தெரிவித்துள்ளார்.
சூதாட்ட விவகாரத்தில் சிக்கிய கன்சர்வேட்டிவ் வேட்பாளர் Craig Williams வெளிப்படையாக மன்னிப்புக் கோரியுள்ளார். கட்சியின் பரப்புரை பொறுப்பாளர் Tony Lee விடுப்பு எடுத்துக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ரிஷி சுனக்கின் பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் சிக்கி, கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.