பிரித்தானிய தேர்தலில் AI அவதார் போட்டி!
பிரித்தானியாவில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் AI திறன் கொண்ட AI Steve அவதார் எம்.பி பொறுப்புக்கு போட்டியிடுகிறது.
சுயேட்சையாக போட்டி
அடுத்த மாதம் பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. பிரைட்டன் பெவிலியன் தொகுதியில் AI அவதார் போட்டியிடுகிறது.
இந்த AI அவதார் சுயேட்சையாக போட்டியிடுவதுடன், மக்களுடன் உரையாடி பிரச்சாரம் செய்து வருகிறது.
Steve Endacott என்ற தொழிலதிபருக்காக இந்த AI அவதார் வேலை பார்க்கிறது. அதாவது, இந்த வேட்பாளர் AI வெற்றி பெற்றால் Steve Endacott நாடாளுமன்றத்திற்கு செல்வார்.
59 வயதாகும் Steve Endacott இது வெறும் ஆரம்பம் தான் என்றும், விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதேபோல் பல AI அவதார்கள் களமிறக்கப்படும் என்றும், ஜனநாயகத்திற்காக மேற்கொள்ளப்படும் நகர்வு இது என்றும் Steve Endacott குறிப்பிட்டுள்ளார்.
AI Steve
Neural Voice என்ற நிறுவனம் இந்த AI அவதார் வேட்பாளரை (AI Steve) வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவரான Steve Endacott தமது முயற்சி குறித்து விளக்கியுள்ளார்.
அவர் கூறுகையில், ”இந்த முயற்சியானது வேடிக்கையானது அல்ல. இது எனது தொழிலை விளம்பரம் செய்ய வேண்டும் என மேற்கொள்ளவில்லை . மக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் எந்நேரமும் அவர்களுடன் தொடர்பில் இருக்க முடியும். நாடாளுமன்றத்தில் நான் முன்னெடுக்கின்ற முடிவுகள் ஒவ்வொன்றும் வாக்காளர்களின் முடிவு என நான் பெருமையாக கூறுவேன். இந்த AI அவதார் மூலம் அவர்களுடன் மின்னணு முறையில் என்னால் தொடர்பில் இருக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.