இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கானோர்: ஸ்தம்பித்த டெல் அவிவ் நகரம்
இஸ்ரேல் கொடிகளை ஏந்தியபடி டெல் அவிவ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக முழக்கமிட்டு, பதவி விலக கோரியுள்ளனர்.
பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டம்
ஹமாஸ் படைகளிடம் சிக்கியுள்ள பணயக்கைதிகளை மீட்கவும், உடனடியாக தேர்தலை முன்னெடுக்கவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த 9 மாதங்களாக நீடிக்கும் காஸாவுக்கு எதிரான போரை பெஞ்சமின் நெதன்யாகு சரிவர கையாளவில்லை என்பதை குறிப்பிட்டு ஒவ்வொரு வாரமும் பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பலர் ஏந்தியிருந்த பதாகைகளில் போரை நிறுத்து மற்றும் குற்றச்செயல் புரியும் அமைச்சர் என வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 66 வயதான நபர் ஒருவர் தெரிவிக்கையில், எனது பேரக்குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி நான் பயப்படுவதால் தான் நான் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளேன். நாம் வீதிக்கு வந்து இந்த கொடூரமான அரசாங்கத்தை அகற்றாவிட்டால் நமது சந்ததிகளுக்கு எதிர்காலம் இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.
டெல் அவிவ் நகரில் திரண்ட மக்களின் எண்ணிக்கை 150,000 இருக்கலாம் என்றே அரசாங்கத்திற்கு எதிரான அமைப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது. மேலும், காஸா போர் தொடங்கியதன் பின்னர் முன்னெடுக்கப்படும் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் இதுவென்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனநாயக முறைப்படி வாய்ப்பில்லை
மக்களில் பலர், தற்போதைய வலதுசாரி கூட்டணி அரசாங்கம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். காஸாவில் போரை நீட்டிப்பதாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பணயக்கைதிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த அரசாங்கம் வீழ்த்தப்பட வேண்டும். 2026ல் தேர்தல் நடத்தப்படும் வரையில் நாம் காத்திருந்தால், அந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வாய்ப்பில்லை என்றும் மக்களில் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலில் 1194 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 251 பணயக்கைதிகள் சிறைபிடிக்கப்பட்டனர். தற்போது காஸாவில் 116 பேர்கள் ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
பதிலுக்கு இஸ்ரேல் முன்னெடுத்துவரும் போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 37,551 என்றே கூறப்படுகிறது.