ஜேர்மன் நகரமொன்று வாக்களித்து உறுதி செய்த விடயம்: சண்டையிட்ட விலங்கு நல ஆர்வலர்கள்
ஜேர்மன் நகரமொன்று தங்களுக்கு அச்சுறுத்தலாக கருதும் புறாக்களை மொத்தமாக ஒழிக்க திட்டமிட்டு, வாக்களித்து உறுதி செய்துள்ள நிலையில் விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எண்ணற்ற புகார்கள்
உள்ளூர் ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, இந்த மாத தொடக்கத்தில் Limburg an der Lahn நகரத்தில் நடந்த பொது வாக்கெடுப்பில், புறாக்களை அழிப்பதற்கு ஆதரவாக குடியிருப்பாளர்கள் வாக்களித்துள்ளனர்.
உண்மையில் புறாக்களுக்கு எதிரான சட்டப் போராட்டம் என்பது, பறவைகளின் கழிவுகள் தொடர்பில் எண்ணற்ற புகார்கள் எழுந்த நிலையிலேயே முன்னெடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.
இந்த புகார்களை குடியிருப்பாளர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் சந்தை விற்பனையாளர்களே பெரும்பாலும் பதிவு செய்தனர். ஜூன் 20ம் திகதி வெளியான தகவலில், பொதுமக்களின் இந்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டுமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவே நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுவரை முடிவெடுக்கவில்லை
ஆனால் பொதுமக்கள் வாக்களித்துள்ள இந்த முடிவை எப்போது அமுலுக்கு கொண்டுவர வேண்டும் என்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பரில், லிம்பர்க் நகரின் புறாகளைக் கொல்ல ஒரு பால்கனர் நியமிக்கப்பட வேண்டும் என்று நகர சபை முடிவு செய்தது. புறாக்களை தன் பக்கம் ஈர்க்க செய்து, பின்னர் அந்த பறவைகளை அவர் அப்போதே கொலை செய்வார் என்றே முடிவானது.
ஆனால் இந்த விவகாரம் விலங்குகள் நல அமைப்புகளால் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. இந்த நிலையில், வியாழன் அன்று நகர மேயர் தெரிவிக்கையில், வாக்கெடுப்பு நடைமுறைப்படுத்துவது குறித்த இறுதி ஆய்வு இன்னும் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.