காயமடைந்த பாலஸ்தீனியரை ஜீப் முன் கட்டி வலம் வந்த இஸ்ரேலிய இராணுவம்
பாலஸ்தீனத்தில், சனிக்கிழமையன்று மேற்குக் கரையில் உள்ள ஜெனினில் நடந்த சோதனையின் போது காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை, இஸ்ரேலிய வீரர்கள் தங்கள் ஜீப்பின் முன்பக்கத்தில் கட்டி கொண்டு வந்துள்ளனர்.
அதன் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
என்ன நடந்தது?
இஸ்ரேலிய இராணுவம் சில தேடப்படும் பாலஸ்தீனியர்களைப் பிடிக்க மேற்குக் கரையின் வாடி புர்கின் பகுதிக்குச் சென்றுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் அறிக்கையின்படி, இந்த நடவடிக்கையின் போது இராணுவத்திற்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் ஒருவர் காயமடைந்தார்.
இதன் பின்னர் காயமடைந்த பாலஸ்தீனியர்களை படையினர் அப்பகுதியில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.
அதின் ஒருவரை ஜீப்பின் முன்பக்கத்தில் கட்டி கொண்டுவந்துள்ளனர். ஆனால், அந்த நபர் பின்னர் ஐநா ரெட் கிரசண்ட் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எங்கள் உத்தரவுக்கு எதிரானது, நாங்கள் தண்டிப்போம்..
பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியரின் பெயர் முஜாஹித் ஆஸ்மி. இஸ்ரேல் பாதுகாப்பு படை இந்த விஷயத்தை உறுதி செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
காணொளியில் காணப்படுவது எங்களின் உத்தரவுக்கு எதிரானது, அதை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவோம் என இஸ்ரேல் ராணுவப் படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து, காயமடைந்த பாலஸ்தீனியர்களின் குடும்பத்தினர் கூறியதாவது, அவர்கள் இஸ்ரேல் ராணுவத்திடம் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளனர். ஆனால் அதற்குப் பதிலாக ஜீப்பின் பானட்டில் கட்டிவிட்டு ஓட்டிச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.