பரபரப்பாகும் நீட் விவகாரம்: 110 மாணவர்கள் தகுதிநீக்கம் – சிபிஐ விசாரணைக்கு அதிரடி உத்தரவு
நீட் விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ள சிபிஐ, கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக நாடு முழுவதும் 110 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நடப்பாண்டுக்கான இளநிலை நீட் தேர்வை கடந்த மே 5ஆம் தேதி நாடு முழுவதும் 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய நிலையில், ஜூன் 4ஆம் தேதி வெளியான முடிவுகள் புயலை கிளப்பின.
வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. வினாத்தாள் கசிந்ததால் தேசிய தேர்வு முகமை நடத்தும் யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மத்திய கல்வி அமைச்சகம், அதில் நடந்த குளறுபடிகள் குறித்து வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைத்தது.
இதையடுத்து, இளநிலை நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ தரப்பில் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக, சிறப்புக் குழுவை சிபிஐ அமைத்துள்ளது. இதையடுத்து, பிகார் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு சிபிஐ அதிகாரிகள் விரைந்தனர்.
பீகாரில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் அம்மாநில காவல்துறை மற்றும் பொருளாதார குற்றப்பிரிவினர் வழங்கினர்.
இந்நிலையில், நீட் வினாத்தாளை கசிய விட்ட விவகாரத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பதுங்கியிருந்த 6 பேரை கடந்த 21-ஆம் தேதி பீகார் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு முன்பாக, பாட்னாவில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, இளநிலை நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக முதற்கட்டமாக 110 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதிநீக்கம் செய்துள்ளது. இவர்களில் 40 மாணவர்கள் குஜராத் மாநிலத்தையும், 17 மாணவர்கள் பிகார் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இளநிலை நீட் தேர்வில், கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டதால் நேற்று நடைபெற்ற மறு தேர்வில் 1,563 மாணவர்களில் 813 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
ஏற்கனவே தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி, கலந்து கொள்ளாத 750 பேருக்கு கருணை மதிப்பெண் கழிக்கப்பட்டு, அவர்கள் பெற்ற மதிப்பெண் மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.