சுவிட்சர்லாந்தில் கொட்டும் மழையில் அரசு அலுவலகம் முன் திரண்ட நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர்
நாடுகடத்தல் முதலான பல்வேறு விடயங்களுக்கெதிராக, சனிக்கிழமையன்று, சுவிட்சர்லாந்தில் கொட்டும் மழையில் அரசு அலுவலகத்தின் முன் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் திரண்டு பேரணிகள் நடத்தினார்கள்.
கொட்டும் மழையில் அரசு அலுவலகத்தின் முன் திரண்ட புலம்பெயர்ந்தோர்
சனிக்கிழமையன்று, Bern நகரில் அமைந்துள்ள பெடரல் அரசு அலுவலகங்கள் முன், 800க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் திரண்டிருந்தார்கள். அவர்கள், எரித்ரியா நாட்டவர்கள்.
சுவிட்சர்லாந்தில், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட, எரித்ரியா நாட்டவர்கள் சுமார் 300 பேர் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடுகடத்த சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருகிறது.
தங்களை நாடுகடத்துவதை எதிர்த்தும், சுவிஸ் அரசியலில் எரித்ரியா நாட்டவர்களுக்கெதிராக இனவெறுப்பு காட்டப்படுவதை எதிர்த்தும் எரித்ரியா நாட்டவர்கள் பேரணி நடத்தினார்கள்.
அதுமட்டுமின்றி, எரித்ரியா நாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் குடியிருப்பு அனுமதி கோரும்போதும், திருமணம் செய்துகொள்ளும்போதும், தங்கள் குடும்பத்தினருடன் இணைந்துகொள்ள விண்ணப்பிக்கும்போதும், அவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கவேண்டும்.
ஆனால், ஜெனீவாவிலுள்ள எரித்ரியா தூதரகத்தில் எரித்ரியர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால், அவர்கள் சுய பிரகடன படிவம் ஒன்றில் கையெழுத்திட வலியுறுத்தப்படுகிறார்கள்.
அந்தப் படிவத்தில், தாங்கள் எரித்ரிய அரசுக்கு உண்மையாக இல்லையென்றும், தாங்கள் மீண்டும் எரித்ரியாவுக்குத் திரும்பினால், அங்கு கொடுக்கப்படும் எந்த தண்டனையையும் ஏற்றுக்கொள்வோம் என்றும், இந்த கட்டுப்பாடுகளுக்கு தாங்கள் ஒப்புக்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.