அவர்களின் வெற்றிவாய்ப்பு கவலை அளிக்கிறது… பிரான்ஸ் தேர்தல் தொடர்பில் ஜேர்மன் சேன்ஸலர்
எதிர்வரும் பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிகளின் வெற்றிவாய்ப்பு தம்மை கவலைகொள்ள வைத்துள்ளதாக ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மிக மோசமான தோல்வி
பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கான முதல் சுற்று தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களே எஞ்சியுள்ள நிலையில், ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் கட்சி மிக மோசமாக பிந்தங்கியுள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் மேக்ரானின் கட்சி மிக மோசமான தோல்வியை எதிர்கொண்ட நிலையிலேயே, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார் இமானுவல் மேக்ரான்.
ஆனால், தற்போதைய சூழலில் இமானுவல் மேக்ரான் தீவிர வலதுசாரிகளிடம் ஆட்சியை பறிகொடுப்பார் என்றே கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும், பிரித்தானியாவில் ரிஷி சுனக் கட்சி எதிர்கொள்ளவிருக்கும் ஏமாற்றத்தை விடவும் மிக மோசமான சூழலை இமானுவல் மேக்ரான் எதிர்கொள்வார் என்றும் சில அரசியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையிலேயே பிரான்ஸ் தேர்தல் தம்மை கவலைகொள்ள வைத்துள்ளதாக ஜேர்மன் சேன்ஸலர் ஷோல்ஸ் ஊடகம் ஒன்றில் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். மேலும், Le Pen போன்றவர்களின் கட்சி ஆட்சியை கைப்பற்றாமல் இருக்க வேண்டும் என்றார்.
அறுதிப் பெரும்பான்மை
ஆனால் அதை முடிவு செய்ய வேண்டியது பிரான்ஸ் மக்கள் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, ஜூன் 30ம் திகதி முன்னெடுக்கப்பட இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கருத்துக்கணிப்பில் ஆளும் கூட்டணி கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஜூலை 7ம் திகதி இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இதனால் தீவிர வலதுசாரி கட்சியான National Rally-ன் Jordan Bardella பிரான்சின் புதிய பிரதமராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால் தங்கள் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே தாம் பிரதமராக பொறுப்பேற்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடந்து முடிந்த ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் ஜேர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியான AfD தமது செல்வாக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.