காஸாவில் இருந்து லெபனான் எல்லை… நெதன்யாகுவின் முடிவால் அடுத்த போர் மூளும் அபாயம்
ரஃபா பகுதியில் இனி தாக்குதலை முடித்துக் கொள்வதாகவும், இஸ்ரேல் ராணுவத்தின் தேவை லெபனான் எல்லையில் இருப்பதாகவும் நெதன்யாகு கூறியுள்ளது, இன்னொரு போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
போர் முடிவுக்கு வரவில்லை
காஸா மீதான கடுமையானத் தாக்குதலை முடித்துக் கொள்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் ராணுவம் இனி லெபனான் எல்லைக்கு நகர இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இஸ்ரேல் ராணுவம் அடுத்து லெபனானுடன் போரிட முடிவு செய்துள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே ஹிஸ்புல்லாவை எதிர்கொள்ள லெபனானுடனான இஸ்ரேலின் எல்லைக்கு மேலும் துருப்புக்கள் அனுப்பப்படும் என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நெதன்யாகு தெரிவிக்கையில், தெற்கு காஸா நகரில் ஹமாஸ் படைகளுக்கு எதிரான போராட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது என்றார்.
லெபனான் தாக்குதலுக்கு ஒப்புதல்
ஆனால், எப்போது முடித்துக்கொள்வார்கள் என்பதை நெதன்யாகு குறிப்பிடவில்லை. இந்த நிலையில் சமீப வாரங்களாக இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே மோதல் போக்கு முற்றிவருவது புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது போரில் முடிந்துவிடும் என்ற அச்சமும் தற்போது அதிகரித்துள்ளது. இதனிடையே, லெபனான் தாக்குதலுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கடந்த வாரம் அறிவித்தது.
முழு அளவிலான போர் ஏற்பட்டால் இஸ்ரேலின் எந்தப் பகுதியும் மிஞ்சாது என ஹிஸ்புல்லா தலைவர் Hassan Nasrallah இதற்கு பதிலளித்திருந்தார்.