யாழில் இளைஞன் கொலை சம்பவம்… சந்தேக நபர்கள் வழங்கிய அதிர்ச்சி தகவல்கள்!
யாழ்.நெடுந்தீவில் மது விருந்தில் நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலையில் முடிவடைந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் நெடுந்தீவு 7ஆம் வட்டார பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் அமல்ராஜ் என்பவரே கடந்த 19-06-2024 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடரிபில் மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த நபரும் அவரது நண்பர்களும் மதுவிருந்து ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது, நண்பர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதில், கொலையான நபர் மற்றுமொரு நபர் மீது கைகளால் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
அதில் ஒருவர் முகத்தில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதனையடுத்து உயிரிழந்த நபரை, அங்கிருந்த மற்றுமொரு இளைஞன் சம்பவ இடத்தில் இருந்து அழைத்து சென்றுள்ளார்.
முகத்தில் காயமடைந்த நபரை அங்கிருந்த ஏனைய 3 நபர்களும் நெடுந்தீவு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்த நபர், வைத்தியசாலைக்கு அழைத்து வந்த நபர்கள் மற்றும் காயங்களுக்கு உள்ளாகிய நபருடன் முரண்பட்டுள்ளார்.
அவ்வேளையே காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்த நபர்கள், தாக்கிய போது, குறித்த நபர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேவேளை கொலையான நபரினால் தாக்குதலுக்கு உள்ளான நபரை மறுநாள் வியாழக்கிழமையே நெடுந்தீவு பொலிஸார் கைது செய்திருந்த நிலையில், ஏனைய 3 பேர் தலைமறைவாகி இருந்தனர்.
அவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவரையும் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் படகில் யாழிற்கு அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், அவர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துளள்னர்.