எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார்: சரத் பொன்சேகா அதிரடி
இலங்கையின் சார்பாக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்திலேயே பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் இன்னும் சில மாதங்களில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதிபர் தேர்தல்
இந்தநிலையில், ஊழலை அம்பலப்படுத்துவதற்கும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் அரசியல் விருப்பம் உள்ள ஒரு தலைவரை இலங்கை தெரிவு செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளது.
இதுவரை எந்தத் தலைவரும் அப்படிச் செய்யவில்லை. எனினும், எதிர்வரும் அதிபர் தேர்தலில் அவ்வாறானதொரு தலைவரை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு அமையும் என நான் நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் தரப்புக்கள் கூறுகின்றன.
சுயேட்சை வேட்பாளர்
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரான அவர், இது தொடர்பில் முறையான அறிவிப்பை வெளியிடுவார் என்று பொன்சேகாவுக்கு நெருக்கமான தரப்புக்களை கோடிட்டு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் பொன்சேகா எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டு சேராமல் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.