2000 குற்றவாளிகளை ரிலீஸ் செய்த போலி நீதிபதி… இந்தியாவையே அதிரவைத்த கிரிமினல் மிட்டல்!
காவலர்களின் ரெக்கார்ட்களில் ‘இந்தியன் சார்லஸ் சோப்ராஜ்’ என்றும் அழைக்கப்படும் தானி ராம் மிட்டல், இந்தியாவின் மிகவும் கற்றறிந்த மற்றும் புத்திசாலித்தனமான குற்றவாளிகளில் ஒருவராக அறியப்படுகிறார். சட்டப் பட்டதாரி, கையெழுத்து நிபுணர், வரைபடவியல் நிபுணர் என நம்பப்படும் மிட்டல், தனக்கு ஏராளமான தகுதிகள் இருந்தபோதிலும், திருட்டு வாழ்க்கையைத் தனது வாழ்வாதாரமாக கொண்ட ஒரு நபராக இருந்துள்ளார்.
ஏறக்குறைய 60 ஆண்டுகளாக மிட்டல் ஒரு அதிர்ச்சியூட்டும் குற்றவியல் வரலாற்றைக் குவித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், மிட்டல் இதுவரை அதிக எண்ணிக்கையிலான கைதுகள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட கார்களைத் திருடியுள்ளார். முதன்மையாக டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டப்பகலில் கார்களைத் திருடுவது அவரது வழக்கமான பாணியாக இருந்துள்ளது.
இருப்பினும், மிட்டலின் மிகவும் ஆச்சரியமான குற்றங்களில் ஒன்று கூடுதல் அமர்வு நீதிபதியின் தற்காலிக விடுமுறையை ஏற்பாடு செய்தது. சுறுக்கமாக சொல்லவேண்டுமானால், இந்த மாஸ்டர் மைண்ட் திட்டத்திற்கு, மிட்டல் சில போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஜாஜ்ஜார் நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதியை இரண்டு மாத விடுமுறையில் அனுப்பினார். அதன் பிறகு ஆவணங்கள் மூலம் அதிகாரிகளை நம்பவைத்த மிட்டல், நீதிபதி நாற்காலியில் அவரே அமர்ந்து 2,000 குற்றவாளிகளை விடுவித்துள்ளார். எவ்வாறாயினும், அவரால் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் பின்னர் மீண்டும் தேடப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மிட்டல் தனது சொந்த வழக்கை விசாரித்து அதற்கும் தானே தீர்ப்பளித்துக் கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. என்ன நடக்கிறது என்று அதிகாரிகள் தெளிந்து கொள்வதற்குள், ராம் மிட்டல் தப்பி ஓடிவிட்டார். சட்டப் பட்டதாரியான மிட்டல், 1968 முதல் 1974 வரை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஸ்டேஷன் மாஸ்டராகப் பணிபுரிந்தார்.
ஜனவரி மாத தொடக்கத்தில், டெல்லியின் பாஸ்சிம் விஹாரில் கைது செய்யப்பட்ட பின்னர் மீண்டும் ஒருமுறை மிட்டல் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். ஷாலிமார் பாக் பகுதியில் இருந்து திருடிய மாருதி எஸ்டீம் காரை ஸ்கிராப் டீலருக்கு விற்க முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில், ஆன்டி-ஆட்டோ தெஃப்ட் சிஸ்டம் இல்லாத பழைய வாகனங்களை குறிவைத்து திருடுவதை மிட்டல் ஒப்புக்கொண்டார். பின்னர், மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டபோது தனது நீதிபதி நாடகத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை கேட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராம் மிட்டல் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இப்படி பல கிரிமினல் குற்றங்களுக்கு பெயர்போன மிட்டல், கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.