அவர்கள் இருவரின் வெற்றி உள்நாட்டுப் போரைத் தூண்டும்… எச்சரிக்கும் இமானுவல் மேக்ரான்
பிரான்சில் தீவிர வலதுசாரிகள் அல்லது தீவிர இடதுசாரிகளின் தேர்தல் வெற்றி என்பது உள்நாட்டுப் போரைத் தூண்டக் கூடும் என்று ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டுக்கு ஆபத்து
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது இந்த இரு முன்னணிகளும் முன்னிலையில் இருப்பது நாட்டுக்கு ஆபத்து என்றே இமானுவல் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
தீவிர வலதுசாரி அமைப்பான National Rally கட்சியின் தேர்தல் அறிக்கையில் குற்ற நடவடிக்கைகள் மற்றும் குடியேற்றம் குறித்த அச்சங்களைச் சமாளிப்பதற்கான அவர்களின் தீர்வுகள் களங்கம் அல்லது பிரிவினையின் அடிப்படையில் அமைந்துள்ளன என்றும் மேக்ரான் விமர்சித்துள்ளார்.
வலதுசாரிகள் முன்வைக்கும் தீர்வு என்பது மக்களை அவர்களின் மதம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்துகிறது, அதனால்தான் அது பிளவு மற்றும் உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கும் என தாம் கருதுவதாக மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
இதே விமர்சனங்களை தீவிர இடதுசாரிகளான LFI கட்சி மீதும் மேக்ரான் முன்வைத்துள்ளார். ஜனாதிபதி மேக்ரானின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள National Rally கட்சியின் தலைவர் Jordan Bardella பொறுப்புள்ள ஒரு அரசியல்வாதி இப்படியான கருத்துகளை வெளிப்படுத்துவது முறையல்ல என்றார்.
உள்நாட்டு அமைதியின்மை
ஆனால், பிரான்சின் முக்கிய தலைவர்களில் ஒருவரான Jean-Luc Mélenchon தெரிவிக்கையில், பிரெஞ்சு வெளிநாட்டுப் பிரதேசமான நியூ கலிடோனியாவின் தற்போதைய நிலையை குறிப்பிட்டு, மேக்ரானின் சொந்தக் கொள்கைகளே உள்நாட்டு அமைதியின்மையைக் கொண்டு வந்தன என்றார்.
முன்னதாக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட National Rally கட்சி குடியேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை குறிப்பிட்டுள்ள நிலையிலேயே மேக்ரான் தமது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.