சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே..பிரித்தானிய சிறையில் இருந்து விடுதலை
உளவு குற்றச்சாட்டை எதிர்கொண்ட ஜூலியன் அசாஞ்சே பிரித்தானிய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
விக்கிலீக்ஸ்
ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட்டவர் ஜூலியன் அசாஞ்சே.
தனது விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து இவர் வெளியிட்டது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அவரை அமெரிக்கா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. நெருக்கடிகளைத் தொடர்ந்து ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த அசாஞ்சே, 2019ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு பின் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆவணங்களைப் பெறுவதற்கும், வெளியிடுவதற்கும் சதி செய்ததாக ஒப்புக்கொண்டார்.
விடுதலை
இந்த நிலையில் விக்கிலீக்ஸ் எக்ஸ் பக்கத்தில், ”ஜூலியன் அசாஞ்சே விடுதலையானார். 1901 நாட்களைக் கழித்த பின்னர், சூன் 24 அன்று காலை அவர் பெல்மார்ஷ் பாதுகாப்பு சிறையில் இருந்து வெளியேறினார்” என தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு நீண்ட இடுகையில், விக்கிலீக்ஸ் அசாஞ்சேக்கு லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது மற்றும் மதியம் Stansted விமான நிலையத்தில் இருந்து அவர் கிளம்பினார் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஜூலியன் அசாஞ்சே (Julian Assange) பிரித்தானிய சிறை தண்டனை அனுபவித்ததைத் தொடர்ந்து, ஒப்பந்தப்படி அவரை அமெரிக்க நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுதலை செய்ய உள்ளது. அதன் பின்னர் அசாஞ்சே தனது சொந்த நாடான அவுஸ்திரேலியாவுக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.