கேஜரிவாலுக்கு வழங்கிய ஜாமீனுக்குத் தடை: தில்லி உயர் நீதிமன்றம்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனுக்கு தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தில்லில்யில் கலால் முறைகேடு தொடர்பான வழக்கில் தொடரப்பட்ட பணமோசடி வழக்கில், அரவிந்த் கேஜரிவால் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த கீழமை நீதிமன்றம் பிணை மனு மீதான விசாரணையின்போது, அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆவணங்களை சரியாக ஆய்வு செய்யவில்லை, அமலாக்கத் துறைக்கு போதுமான வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தில்லி கலால் கொள்கை மோசடி வழக்கில் பதிவு செய்யப்பட்ட பண மோசடிப் புகாரில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு பிணை வழங்கியபோது, கீழமை நீதிமன்றம், அதில் சரியான கவனத்தை செலுத்தவில்லை என்றும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே, அமலாக்கத் துறை தொடர்ந்த மனு மீது விசாரணையைத் தொடங்கியபோதே, தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் பிறப்பித்த பிணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால் பிணையில் வெளியே வர அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இன்று ஏற்பட்டிருந்தது. ஆனால், கேஜரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.
தில்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்புடைய சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அரவிந்த கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கி கீழமை நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத் துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.