யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றும் தமிழ்பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு
சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை சிறப்பிக்கும் முகமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றும் தமிழ்பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு ஒன்றினை இன்று புதன்கிழமை(26) மு.ப 09.00 – பி.ப.03.30 மணிவரை யாழ்ப்பாண பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடாத்தியது.
இந்த செயலமர்வில் சித்திரவதை தொடர்பான சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டங்கள் தொடர்பிலும் சித்திரவதையினால் ஏற்படும் உடல் மற்றும் உள பாதிப்புகள் தொடர்பிலும் சித்திரவதையினை முடிவுக்கு கொண்டுவரும் செயற்பாட்டில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் தெளிவுப்படுத்தல்கள் இடம்பெற்றன.
இச்செயலமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் டொக்டர் செ. பிரணவன் மற்றும் மற்றும் டொக்டர் கலைச்செல்வி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மனித உரிமை அலுவலர் செல்வி குமுதினி சேவியர் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி பெண் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிரோசா கருணாரத்ன ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.