;
Athirady Tamil News

கள்ளக்குறிச்சி விவகாரம் – ஈபிஎஸ் தலைமையில் உண்ணாவிரதத்தை துவங்கிய அதிமுக!

0

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி
கடந்தவாரம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இப்படியான நிலையில் ஜூன் 20 ஆம் தேதி தமிழக சட்டபேரவை கூடியது. முதல் நாளில் இருந்தே அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக கருப்புச்சட்டை அணிந்து அவை நிகழ்வுகளில் பங்கேற்றனர். மேலும் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் இந்த விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை காவலர்களால் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட பின் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சட்ட சபை
ஆனால் தினமும் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேசக்கோரி கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் இந்த சட்ட சபை கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கள்ளச்சாராய சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் மற்றும் சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது.

உண்ணாவிரத போராட்டம்
சென்னை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்து வரும் இந்த உண்ணாவிரத போராட்டம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும். போராட்டம் நடத்தும் இடத்திற்கு வாகனங்களை கொண்டுவரக்கூடாது. தனிநபரை தாக்கி பேசக் கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது உள்ளிட்ட 23 கட்டுப்பாடுகள் அதிமுகவுக்கு காவல்துறை விதித்துள்ளது. ,மேலும் உண்ணாவிரத போராட்டத்திற்கு 400 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.