;
Athirady Tamil News

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவொன்றை உருவாக்குவது தொடர்பில் கிளிநொச்சியில் பல தரப்பினர்களுடன் கலந்துரையாடல்!

0

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (ISTRM) மற்றும் உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணையம்(CTUR) இலங்கையில் வடக்கு கிழக்கில் நிலவிய மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அநீதிகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கையில் ஆணைக்குழுவொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான விளக்கத்தினை வழங்கவும் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளவதற்கான கலந்துரையாடல்கள் நேற்று(26) கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு அமர்வுகளாக நடைபெற்றன.

இலங்கையில் தேசிய நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் நோக்கில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடக்கால செயலகத்தின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

1983 – 2009 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிய பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்படும் ஒரு சுயாதீனமான நிறுவனமாக உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

உத்தேச ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் முறையாக தகவல்களைத் திரட்டல், வன்முறைகளின் போது நடந்த விடயங்களை அறிக்கையிடல், கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க பரிந்துரை வழங்குதல் மற்றும் மோதலுக்குப் பிந்தைய இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பாரபட்சமற்ற அமைப்பாகப் பயன்படுத்துவது இதன் நோக்கமாகும்.

அவற்றில் ஒரு கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

அடுத்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

மூன்றாவது கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.

நான்காவது கலந்துரையாடல் சாந்தபுரம் கலைமகள் வித்யாலயாலயம் மற்றும் மலையாளபுரம் கிராம சேவகர் அலுவலகம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இங்கு, நாட்டில் தேசிய நல்லிணக்கத்திற்கான உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின்(ISTRM) தற்போதைய வேலைத் திட்டங்கள் குறித்தும் இந்த சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதன் நோக்கம் மற்றும் உத்தேச சட்டமூலம் குறித்து விளக்கமளிக்கப்பட்டன.

மேலும், இக்கலந்துரையாடலில் இணைந்திருந்தவர்களிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்ட்து. இதனை விட ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை எழுத்து மூலம் முன்வைப்பதற்கான வழிவகை தொடர்பிலும் தெளிவூட்டப்பட்டது.

இந்த சந்திப்புக்களில் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி. அசங்க குணவன்ச, சிரேஸ்ட நிருவாக அதிகாரி ரஞ்சித் ஆரியரட்ண, சிரேஸ்ட நிறைவேற்று அதிகாரி(கொள்கை) கலாநிதி சி.வை தங்கராசா மற்றும் ஆசிப் போர்ட், இணைப்பாளர் சரத் கொத்தலாவல, சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி(சட்டங்கள்) வை.எல். லொக்குநாரங்கொட, நிறைவேற்று அதிகாரி(பொது உறவுகள்) சௌமியா விக்ரமசிங்க மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்காலச் செயலகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.