நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு! பதற்றத்தில் கென்யா
கென்யாவில் நாடாளுமன்றத்திற்கு நெருப்பு வைக்கப்பட்டதற்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
கென்யாவின் தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தில், பாதுகாப்பு அரணை உடைத்து நுழைந்த கூட்டம் நெருப்பு வைத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் களமிறக்கப்பட்டதைத் தொடர்ந்து பல பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதில் 13 பேர் பலியானதாக கென்யாவின் மருத்துவ அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கென்யாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
புதிய வரி பரிந்துரைகளுக்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ இந்தப் போராட்டத்தினை, ”தேசத்துரோகம்” என்றும், ”அமைதியின்மையை எந்த விலை கொடுத்தாலும் அகற்றுவோம்” என்றும் உறுதியளித்தார்.