ஒரு குறிப்பிட்ட நாட்டவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று கூறிய பிரித்தானிய தலைவர்: உருவாகியுள்ள சர்ச்சை
பிரித்தானியாவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துவரும் நிலையில், அடுத்து ஆட்சியைக் கைப்பற்றுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுபவரான ஒரு கட்சியின் தலைவர் கூறிய ஒரு விடயம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பங்களாதேஷ் நாட்டவர்கள் நாடுகடத்தப்படுவார்கள்
பிரித்தானியாவில் அடுத்து ஆட்சியைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் லேபர் கட்சியின் தலைவரான Keir Starmer, பங்களாதேஷ் நாட்டவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என கூறும், எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று பிரித்தானியாவில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.
அதனால், பங்களாதேஷ் பின்னணி கொண்டவர்கள் கோபமடைந்துள்ளார்கள்.
அரசியல்வாதிகள் சிலர் விமர்சனங்கள் முன்வைக்க, லேபர் கட்சித் தலைவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியிலேயே சிலர் பதவி விலகியுள்ளார்கள். மற்றும் சிலர் பங்களாதேஷ் பின்னணி கொண்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
ஆக மொத்தத்தில், தேர்தல் நேரத்தில், புதிதாக ஒரு சர்சை உருவாகியுள்ளது.
உண்மை என்ன?
திங்கட்கிழமையன்று தேர்தல் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லேபர் கட்சித் தலைவரான Keir Starmer, கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியின்கீழ், இந்த ஆண்டு, பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது என்று கூறினார்.
அப்படி பிரித்தானியாவுக்குள் நுழைபவர்கள் அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவார்களா என கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு பதிலளித்த Keir Starmer, ஆம் என்று கூறியதுடன், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து வருவோர் நாடுகடத்தப்படவில்லை, ஏனென்றால், அவர்களுடைய புகலிடக்கோரிக்கைகள் தற்போது பரிசீலிக்கப்படவில்லை என்று கூறினார்.
ஆனால், ஏன் அப்படி பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டும் குறிப்பிட்டுக் கூறவேண்டும் என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
சர்ச்சை உருவானதைத் தொடர்ந்து தங்கள் கட்சித்தலைவரின் கருத்து தவறாக பரப்பப்பட்டு விட்டதாக லேபர் கட்சியினர் கூறியுள்ளதுடன், Keir Starmer பிரித்தானியாவில் வாழும் பங்களாதேஷ் சமூதாயத்தினரை ஆதரிப்பவர்.
அவர்கள் நம் நாட்டுக்கு பலவகையில் நற்பங்காற்றியுள்ளார்கள் என்றும், பிரித்தானியாவில் சட்டப்படி வாழ அனுமதி இல்லாதவர்களை பாதுகாப்பான நாடுகளுக்கு நாடுகடத்தும் கொள்கை குறித்தே அவர் பேசியதாகவும், பங்களாதேஷ் நாட்டை ஒரு உதாரணமாகத்தான் அவர் கூறினார் என்றும் லேபர் கட்சியின் செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.