பூமிக்கு திரும்புவதில் சிக்கல்; தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்..காப்பாற்ற முயலும் எலான் மஸ்க்!
விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்க விண்வெளி துறையில் சமீபத்தில் தனியார் நிறுவனங்கள் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. அதற்கு பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் சார்பில் ‘ஸ்டார் லைனர்’ எனும் ஸ்பேஸ் ஷிப் தயாரிக்கப்பட்டது. அது கடந்த சில நாட்களுக்கு முன்பு விண்வெளிக்கு ஏவப்பட்டது.
அதில், 58 வயதான சுனிதா வில்லியம்ஸூம், அவருடன் சக விண்வெளி வீரராக புட்ச் வில்மோரும் பயணித்தனர். இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை ஸ்டார் லைனரின் பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 14ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த பயணம் தள்ளி தள்ளி போடப்பட்டது.
காப்பாற்றும் எலான் மஸ்க்
இன்றுவரை பூமிக்கு திரும்பாமல் விண்வெளியிலேயே சிக்கி தவிக்கின்றனர். இந்த பயணம் சுமார் 6 மணி நேரம் எடுக்கும் என்பதால் வரும்போது ஏதேனும் கோளாறு ஏற்படலாம் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒருவேலை இந்த பிரச்னைகள் சரி செய்யப்படாவிட்டால், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடும் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்காக எலான் மஸ்க், ‘க்ரூ டிராகன்’ எனும் ஸ்பேஸ் ஷிப்பை தயாராக வைத்திருக்கிறார். விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு வீரர்களை கொண்டு சேர்க்கவே பிரத்யேகமாக இந்த க்ரூ டிராகனை ஸ்பேஸ் எக்ஸ் வடிவமைத்திருக்கிறது.
கடந்த மார்ச் மாதம், க்ரூ டிராகன் 4 வீரர்களை இப்படி பத்திரமாக விண்வெளி மையத்திற்கு கொண்டு சென்று, திரும்பவும் பூமிக்கு அழைத்து வந்திருக்கிறது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை காப்பாற்ற, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த க்ரூ டிராகன் சரியான தேர்வாக இருக்கும் என நம்பப்படுகிறது.