ஐரோப்பிய நாடுகளுக்கு பயணப்படும் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐக்கிய அமீரகம்
பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தங்களது குடிமக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயணிகளுக்கு விடுத்த கோரிக்கை
ஐரோப்பிய நாடுகளில் பயணங்களின் போது ஐக்கிய அமீரக குடிமக்கள் திருட்டு சம்பவங்களில் அதிகமாக சிக்குவதாக எழுந்த புகாரை அடுத்தே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சர் பயணிகளுக்கு விடுத்த கோரிக்கையில், ஆஸ்திரியா, பிரான்ஸ், பிரித்தானியா, இத்தாலி, ஸ்பெயின், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணப்படும் அரபு மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும்,
இந்த நாடுகளில் அரபு மக்களை இலக்கு வைத்து அதிக எண்ணிக்கையிலான திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரபு மக்கள் திருட்டு சம்பவங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள கடைபிடிக்கவேண்டியவையும் அமைச்சர் பட்டியலிட்டுள்ளார்.
அதில், மதிப்புமிக்க அல்லது அரிய பொருட்களை அணிவதை தவிர்க்கவும்; உத்தியோகபூர்வ ஆவணங்களை நீங்கள் வசிக்கும் இடத்தில் பாதுகாப்பாக வைத்திருங்கள்; முறைகேடு மற்றும் மோசடிகளைத் தவிர்க்க, புகழ்பெற்ற உலகளாவிய நிறுவனங்கள் மூலம் கார்கள் மற்றும் ஹொட்டல்களை முன்பதிவு செய்யுங்கள்;
ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா
அமைச்சகத்தின் இணையதளம் மற்றும் ஸ்மார்ட் செயலிகளில் அரபு பயணிகளின் பக்கத்தில் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் ஒவ்வொரு நாட்டிற்குமான குறிப்பிட்ட பயண வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்,
அத்துடன் 0097180024 என்ற ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கான அவசரகால தொடர்பு எண்ணைச் சேமிக்கவும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கோடை காலத்தை முன்னிட்டு பாடசாலைகள் மூடப்படும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெப்பநிலை உயர்ந்து வருவதாலும், அரபு குடும்பங்கள் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாவுக்கு பயணப்பட தொடங்கியுள்ளனர்.
மேலும் பல்வேறு கண்டங்களுக்கு அடிக்கடி குடும்பமாக பயணப்படும் மக்கள் வாழும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.