ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம் – ரிலையன்ஸ் குழுமம் அறிவிப்பு!
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம் செய்யவிருப்பதாக ரிலையன்ஸ் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் விரேன் மெர்ச்சென்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சென்ட்டின் திருமணம் வரும் ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.
இந்த திருமணத்திற்கான கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தின்போது, ஜாம்நகரில் உள்ள அனைவருக்கும் விருந்துகள் பரிமாறப்பட்டது. ரிலையன்ஸ் குழுமத்தலைவர் அம்பானியே அவர்களுக்கு பரிமாரி மகிழ்ந்தார்.
மேலும் அந்த விழாவில் உலக புகழ்பெற்ற பாடகி ரிஹானா, மேஜிக் கலைஞர் டேவிட் பிளேனும் பொழது போக்கு நிகழ்ச்சி, இந்திய பாடகர்கள் அரிஜித் சிங், அஜய்-அதுல் மற்றும் தில்ஜித் தோசன்ஜ் ஆகியோரின் பாடல் நிகழ்ச்சியுடன் திரை பிரபலங்களான ஷாருக் கான், சல்மான் கான், அமீர் கான் ஆகியோரும் நடனமாடினர்.
அதுமட்டுமில்லாமல் அந்த கொண்டாட்டத்தின்போது மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி மெலிண்டா, மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், மோர்கன் ஸ்டான்லி சிஇஓ டெட் பிக், டிஸ்னி சிஇஓ பாப் இகர், பிளாக்ராக் சிஇஓ லாரி ஃபிங்க், அட்னாக் சிஇஓ சுல்தான் அகமது அல் ஜாபர் மற்றும் எல் ரோத்ஸ்சைல்ட் தலைவர் லின் ஃபாரெஸ்டர் டி ரோத்ஸ்சைல்ட், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் மகள் இவான்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, மே 29 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை முக்கிய விருந்தினர்களுடன் ரோம் முதல் கேன்ஸ் வரை கப்பலில் சுற்றுலா சென்றனர்.
தற்போது இந்த கொண்டாட்டத்தின் ஒரு பங்காக ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம் செய்யவிருப்பதாக ரிலையன்ஸ் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜூலை மாதம் 2ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு மகாராஷ்ட்ராவில் உள்ள பல்கார் மாவட்டத்தில் நடைபெறும் என்றும், உயர்ந்த நோக்கத்துடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியும் நீட்டா அம்பானியும் குடும்பத்தினருடன் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விருப்பமுள்ளவர்கள் இந்த நிகழ்ச்சிக்காக தங்களது பங்களிப்பும் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.