;
Athirady Tamil News

வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

இந்தியர்கள், நேபாளிகள் மற்றும் பாகிஸ்தானியர்கள் உட்பட பல்வேறு நாட்டவர்களின் சட்டவிரோத இணைய நிதி மோசடி, நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய பொருளாதாரத்தை பாதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிதி மோசடிகள்

இணையத்தில் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் கணினி குற்றங்கள் என்ற பிரிவின் கீழ் வருவதாகவும் அவை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆடம்பர வீடுகளில் தங்கியிருந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட 137 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா விசாவில் மேலும் பல இந்திய பிரஜைகள் நாட்டில் தங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட சூதாட்ட இணைய பக்கம் நாட்டில் இருந்து இயக்கப்பட்டு வருவதும், இந்திய நாட்டவர்களுடன் தொடர்பு கொண்டு கோடிக்கணக்கில் சூதாட்டம் விளையாடுவதும் தெரியவந்துள்ளது.

இணையம் ஊடாக நிதி மோசடி

இந்த இந்திய பிரஜைகள் பல மாதங்களாக இந்த மோசடியை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

இணையம் ஊடாக நிதி மோசடிகளை மேற்கொள்ளும் வர்த்தகர்களின் வலையமைப்புகளை அம்பலப்படுத்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாடகைக்கு விடப்பட்டாலும், அந்த வீட்டை வாடகைக்கு எடுப்பவர்கள் என்ன வகையான வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டறியும் பொறுப்பு உரிமையாளருக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

வாடகை வீடுகளில் மோசடி
இவ்வாறு கைது செய்யப்பட்ட பலர் வீடுகளை வாடகை அடிப்படையில் வாங்கி மோசடிகளில் ஈடுபட்டுள்ளமையும், பல்வேறு குற்றத்திற்கு பயன்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.