மாவட்ட ரீதியாக தொழிற்றுறை மன்றங்களை உருவாக்குதல்
மாவட்ட மட்டத்தில் தொழில் முயற்சியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெறும் நோக்கில் மாவட்ட ரீதியாக தொழிற்றுறை மன்றங்களை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று 28.06.2024 யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர்,
மாவட்ட தொழிற்றுறை மன்றங்களை உருவாக்கி தொழில் முயற்சியாளர்களின் தேவைகளை அடையாளம் கண்டு அவர்களை வழிப்படுத்தி தெளிவூட்டும் கலந்துரையாடலாக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும் தொழிற்றுறை முன்னேற்றங்களை அடைவதற்கு காரணம் தொழில் முயற்சியாளர்கள் என்றும் தற்போது சர்வதேச ரீதியில் பொருட்கள் சேவைகளை ஏற்றுமதி செய்யும் அளவிற்கும், இதற்கு மேலாக வெளிநாட்டவர் எமது நாட்டு உற்பத்திகளை கொள்வனவு செய்யும் அளவிற்கும் பிரபல்யம் அடைந்துள்ளமைக்கு தொழில் முயற்சியாளர்களே காரணம் என தெரிவித்தார்.
அத்துடன் உதவி வழங்குவதற்காக பல தொழிற்றுறை திணைக்களங்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளதாகவும் அவர்ளுடன் இணைந்து தொழில் முயற்சியாண்மையை பதிவு செய்வதற்கான நியமங்கள் மற்றும் வரையறைகள் தொடர்பான தெளிவூட்டல்களை பெறமுடியுமென குறிப்பிட்டதுடன் பல சவால்களை எதிர்கொண்டு தொடர்ந்து முன்னோக்கி பயணிக்கும் முயற்சியாளர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
தொடர்ந்து இக் கலந்துரையாடலில் தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் தொழிற்றுறை திணைக்கள மாகாண பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், தொழிற்றுறை திணைக்கள உதவி செயலாளர், தொழிற்றுறை திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர், பிரதேச செயலக தொழிற்றுறை திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண வர்த்தக சங்க தலைவர், சிறு தொழில் முயற்சியாளர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.