;
Athirady Tamil News

கள்ளச்சாராய உயிரிழப்பு குற்றத்துக்கு ஆயுள் சிறை, ரூ.10 லட்சம் அபராதம்: பேரவையில் திருத்த மசோதா நிறைவேற்றம்

0

கள்ளச்சாராயத்தால் மரணம் விளைவிப்பவா்களுக்கு ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட உள்ளது.

இதற்கான சட்டத் திருத்த மசோதா (தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937) தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தாக்கல் செய்த சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:

மரணம் ஏற்படுத்துதல்…கள்ளச்சாராயம் அருந்துவதால் மரணம் ஏற்பட்டிருந்தால், அந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களுக்கு ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறையும், ரூ.10 லட்சத்துக்கு குறையாத அபராதத் தொகையும் விதிக்க சட்டத் திருத்தம் வகை செய்கிறது. இதற்கு முன்பாக, ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும், ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

பிற நிகழ்வுகள்: மரணம் ஏற்படாத பிற நிகழ்வுகளில், 5 ஆண்டுகளுக்கு குறையாமல் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய கடுங்காவல் தண்டனையுடன் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன்பு, சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தில், 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.7,000 அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

சாராயமாக மாற்ற முயற்சித்தல்: மனிதா்கள் அருந்துவதற்கு ஏற்ற வகையில் சாராயத்தை மாற்ற அல்லது மாற்ற முயற்சிப்பதற்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இத்தகைய குற்றத்தைச் செய்யும் நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது.

இப்போது மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை, ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம் என அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீல் வைக்க வேண்டும்: மது அருந்துவதற்குப் பயன்படுத்தப்படும் உரிமம் பெறாத இடங்களை மூடி சீல் வைக்க வேண்டும். குறிப்பிட்ட ஓரிடத்தில் உரிமம் பெறாமல் மது அருந்துவதை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அனுமதி பெறாமல் மது அருந்த ஓரிடம் பயன்படுத்தப்பட்டால், அந்த இடம் மதுவிலக்கு அலுவலா் அல்லது வட்டாட்சியா் நிலைக்குக் குறையாத அலுவலரால் சீல் வைக்கப்பட வேண்டும். அந்த இடத்துக்கு உரிய பாதுகாப்பை சம்பந்தப்பட்ட உரிமையாளா் அல்லது பொறுப்பாளரே வழங்க வேண்டும்.

அனுமதியின்றி மது அருந்த பயன்படுத்தப்பட்ட இடம் எதற்காக சீல் வைக்கப்பட்டது என்பதை எழுத்துபூா்வமாக சம்பந்தப்பட்ட

உரிமையாளா்களிடம் 2 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட இடத்தை மூன்று மாதங்களுக்கு மிகாமல் தொடா்ந்து மூடி வைக்கலாம்.

மேல்முறையீடு செய்யலாம்: சீல் வைக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக, சம்பந்தப்பட்ட உரிமையாளா் 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். இந்த மேல்முறையீட்டைப் பெறும் மாவட்ட ஆட்சியா் அதன் மீது உத்தரவுகளைப் பிறப்பிப்பாா். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

கள்ளச்சாராயத்துக்காக வண்டிகள், வாகனங்கள் மற்றும் அசையும் சொத்துகள் பயன்படுத்தப்பட்டு இருந்தால், அவை அரசால் பறிமுதல் செய்யப்படும்.

வேறு மாவட்டத்துக்கு செல்லக் கூறலாம்: கள்ளச்சாராய வழக்கில் ஏற்கெனவே தண்டனை பெற்ற நிலையில், வேறொரு வழக்கில் நீதிமன்றம் தீா்ப்பு அளிக்கலாம். அந்தச் சமயத்தில் நீதிபதி தாமாக அல்லது தீா்ப்பு வழங்கப்பட்ட தேதியில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் நன்னடத்தை அலுவலரிடம் இருந்து கருத்தைப் பெறலாம். தண்டனைக் காலம் முடிவுற்ற பிறகு, அந்த நபரை அவா் வசிக்கிற அல்லது தொழில் செய்கிற இடத்திலிருந்து வேறு மாவட்டத்துக்குச் சென்றுவிடும்படி கேட்டுக் கொள்ளலாம்.

மதுவிலக்கு அமல் சட்டத்தில் உள்ள அம்சங்களுக்கு முரணாக அல்லது சட்டத்தில் உள்ள அம்சங்களை வேண்டுமென்றே மீறக்கூடிய வகையில் செயல்படுபவா்களுக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. இதை ஓராண்டுக்குக் குறையாத மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கும் வகையில் கைது நடவடிக்கை இருக்கும். மேலும், ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

மதுவிலக்கு சட்டப் பிரிவுகளை ஏய்த்தால்…: மதுவிலக்குச் சட்டத்தில் உள்ள பிரிவுகளை ஏய்க்கவோ அல்லது செல்லாதபடி செய்வதற்கு உடன்பாட்டாலோ ஓராண்டுக்கு குறையாத மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கும் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரத்துக்கு குறையாத ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

பேரவையில் விவாதங்களுக்குப் பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது.

போதை மருந்து குறித்து

விளம்பரம் செய்தால் 5 ஆண்டு சிறை

மது அல்லது போதை மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என்றோ, விற்பனைக்கு இருப்பதாகவோ விளம்பரம் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய கடுங்காவல் தண்டனையும், ரூ.1 லட்சத்துக்கு குறையாமல் ரூ.2 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன்பாக, ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்க சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

இப்போது அதில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, மது அல்லது போதையை விளம்பரப்படுத்தினால் சிறைத் தண்டனையும், அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.