குறைக்கப்படும் பேருந்து கட்டணம்
இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் குறைக்கப்படுவதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித்(Anjana Priyanjith) தெரிவித்துள்ளார்.
தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் பிரகாரம் இந்த கட்டண குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறையும் கட்டணம்
இதன்படி, பேருந்து கட்டணம் 5.27% குறைக்கப்படும் எனவும், இதன் விளைவாக குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 30ரூபாவில் இருந்து 28ரூபாவாக மாறும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேசமயம், மக்களிடம் நாங்கள் ஒரு சிறப்பு வேண்டுகோள் வைக்கிறோம், இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் பேருந்துக் கட்டணக் குறைப்பின் பயனை முழுமையாக பயணிகள் பெற வேண்டுமானால், அவர்கள் சில்லறைப் பணத்தை கொண்டு வர வேண்டும்.
இல்லையெனில், 30 ரூபாவாக இருந்த பேருந்துக் கட்டணம் 28 ரூபாவாக மாற்றப்பட்டாலும் கூட, இந்த இரண்டு ரூபாய் பிரச்சினை இருக்கும். மேலும் ஒவ்வொரு கட்டணத்திலும், இந்த இரண்டு, மூன்று மற்றும் ஐந்து ரூபாய் போன்ற நாணயங்களை மாற்றுவதில் சிக்கல் இருக்க வாய்ப்புள்ளது என அஞ்சன பிரியஞ்சித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை குறைப்பு
இதேவேளை, மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலையை குறைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, எரிபொருள் விலை திருத்தம் இன்று (30ஆம் திகதி) இரவு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், இம்முறை எரிபொருள் விலையில் பாரிய திருத்தம் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்குள் உலக சந்தையில் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்ற அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 31ஆம் திகதி இறுதியாக எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.