;
Athirady Tamil News

நடிகர் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- பால் முகவர்கள் சங்கம் அறிக்கை

0

நடிகர் விஜய் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பால் முகவர்கள் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.

வெளியான அறிக்கை
“தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டி அவர்களை ஊக்குவித்துள்ள உங்களை பாராட்டுகிறோம்.

மேலும் நேற்று நடைபெற்ற விழா மேடையில் மாணவ, மாணவியர் முன்னிலையில் தாங்கள் பேசும் போது ‘தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவது பெற்றோராகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் அச்சம் ஊட்டுகிறது’ என கவலைப்பட்டு பேசியிருப்பது ‘ஆடு நனைவதாக ஓநாய் அழுத கதை’ என்கிற பழமொழியை நினைவூட்டுவதாக தங்களின் பேச்சு அமைந்திருக்கிறது.

ஏனெனில் தங்களின் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்களில் மது, சிகரெட் உள்ளிட்ட போதை வஸ்துகள் பயன்படுத்தும் காட்சிகளும், துப்பாக்கி, கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் போன்ற வன்முறை காட்சிகளும் இல்லாமல் இருந்ததில்லை.

மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் பேராசிரியர் கதாபாத்திரத்தில் தங்கள் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தின் ஆரம்ப காட்சியிலேயே தாங்கள் போதையில் படுத்திருக்கும் காட்சியமைப்பு இருக்கும். அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் கூட மது, சிகரெட் குடிக்கும் காட்சிகள் இருந்தது.

அது உங்கள் தொழில் சார்ந்த நடிப்பு தான் என்றாலும் கூட அது போன்ற காட்சிகள் இளம் பிஞ்சுகள் மனதில் தங்களின் ஆதர்ஷ நாயகனின் நடிப்பு அப்படியே பசுமரத்தாணி போல் ஆழப்பதிந்து அவர்களின் வளர்பருவத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான குடிநோயாளிகளாக மாறிப் போகின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் மதுக்கடைகளை திறந்து வைத்து சாராயத்தை விற்பனை செய்யும் அரசுக்கும் உங்களைப் போன்ற நடிகர்கள் தான் விளம்பர தூதுவர்கள் என்றால் அது மிகையாகாது.

எனவே இளம் பிஞ்சுகள் மனதில் நஞ்சை விதைத்து தமிழகத்தில் போதை கலாச்சாரமும், குடிநோயாளிகளும் பெருக காரணமான அது போன்ற காட்சியமைப்பு கொண்ட பல படங்களில் நடித்த தாங்கள் தற்போது மாணவர்கள் மத்தியில் பேசும் போது அது போன்ற காட்சிகளில் நடித்தமைக்காக எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல், மாணவர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்காமல் பேசியது ஏற்கனவே ஆண்ட, தற்போது ஆளுகின்ற கழக தலைவர்களுக்கும் தங்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.

இதனால், தாங்கள் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்பதை தவிர்க்கும் பட்சத்தில் நேற்று நடைபெற்ற விழா மேடையில் மாணவ, மாணவியர் முன்னிலையில் இளம் தலைமுறையினரின் போதை கலாச்சாரம் குறித்து பேசியதும் ஒரு நடிப்பு தான். அது தங்களின் கட்சிக்கான, அரசியல் பயணத்திற்கான 100% அரசியல் நாடகம் தான் என்பது உண்மையாகிப் போகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இளம் தலைமுறையினர் மத்தியில் போதை வஸ்துகளின் பயன்பாடு, கலாச்சாரம் ஒழிய அல்லது ஒழிக்க தங்களின் பகிரங்க மன்னிப்பு மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும், உந்து சக்தியாகவும் மாறும்.

நீங்கள் இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகி, உந்து சக்தியாக நிகழப் போகிறீர்களா? இல்லை ஏமாற்று கழக அரசியல்வாதிகள் போல் ஆகப் போகிறீர்களா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.