பிரபலமடைய தனக்கு எதிராகவே சதித்திட்டம் தீட்டிய ஒரு நாட்டின் ஜனாதிபதி
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியானது அந்த நாட்டின் ஜனாதிபதி தனக்கு எதிராகவே தீட்டிய சதித்திட்டம் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
3 மணி நேரத்தில் முடிவுக்கு வந்த
பொலிவியா தலைநகர் லா பாஸில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மீது அந்த நாட்டின் ராணுவம் புதன்கிழமை திடீரென்று தாக்குதலை முன்னெடுத்தது. உள்ளூர் நேரப்படி சுமார் 2.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகையை ராணுவம் முற்றுகையிட்டது.
முன்னாள் ராணுவத்தளபதி Juan José Zuñiga தலைமையில் நடந்த இந்த தாக்குதலை அடுத்து, ஜனாதிபதி Luis Arce உடன் கடும் விவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் தமது தோல்வியை ஒப்புக்கொண்ட முன்னாள் தளபதி தமது படைகளுடன் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார்.
வெறும் 3 மணி நேரத்தில் முடிவுக்கு வந்த இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதித்திட்டமானது, மிகவும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்த சதித்திட்டமாக கருதப்படுகிறது. இதனிடையே, ஜனநாயகத்தை காக்க மக்கள் அனைவரும் அணி திரள வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி Luis Arce முன்வைக்க,
புதிதாக நியமிக்கப்பட்ட தளபதியின் உத்தரவுக்கு பணிந்து ராணுவ வீரர்களும் தங்கள் முகாமிற்கு திரும்பினர். இந்த நிலையிலேயே 3 மணி நேரத்தில் முடிவுக்கு வந்த இந்த ஆட்சிக்கவிழ்ப்பு தொடர்பில் உண்மையான பின்னணி வெளிச்சத்துக்கு வந்தது.
சுமார் 200 ராணுவ அதிகாரிகள்
12.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பொலிவியா 1825ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை 190 ஆட்சிக்கவிழ்ப்புகளை எதிர்கொண்டுள்ளது. புதன்கிழமை ஆட்சிக்கவிழ்ப்பை முன்னெடுத்த Juan José Zuñiga கைதான நிலையில், ஜனாதிபதியே தனது புகழை அதிகரிக்கச் செய்யும் வகையில் சதித்திட்டம் தீட்டியதாக ஊடகங்களிடம் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
மட்டுமின்றி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் மிக நெருக்கமாக இருந்த Juan José Zuñiga திடீரென்று பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் அடுத்த நாள் அவர் தமது ஆதரவு ராணுவ வீரர்களுடன் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். வெள்ளியன்று, முன்னாள் கடற்படை துணை அட்மிரல் உட்பட மேலும் 20 அதிகாரிகளை கைது செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.
இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் சுமார் 200 ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.