கேரள மலைவாழ் மக்களை பாராட்டிய பிரதமர் மோடி… மன் கி பாத் நிகழ்ச்சியில் சுவாரசியம்!
கேரளாவில் மலைவாழ் மக்கள் தயாரிக்கும் குடைகளை பாராட்டி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் மன் கி பாத் என்ற பெயரில் வானொலியில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மக்களவை தேர்தல் காரணமாக பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. இந்நிலையில், தேர்தலுக்கு பின்னர் இன்று ஒலிபரப்பப்பட்ட 111 ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது-
எனக்குப் பிடித்தமான நாட்டுமக்களே, தேசத்தின் பல்வேறு பாகங்களில் பருவமழையானது வேகமாக பெய்து வருகிறது. மேலும் இந்த மழைக்காலத்தில், அனைவரின் வீடுகளிலும் தேடப்படும் ஒரு பொருள் என்றால் அது குடை. மனதின் குரலில் இன்று ஒரு விசேஷமான குடைகளைப் பற்றிய தகவலை நான் உங்களுடன் பகிர இருக்கிறேன்.
இந்தக் குடை நமது கேரளத்திலே தயார் செய்யப்படுகிறது. பார்க்கப்போனால், கேரளத்தின் கலாச்சாரத்திலே குடைகளுக்கென ஒரு விசேஷ மகத்துவமுண்டு. குடைகள் என்பவை அங்கே பல பாரம்பரிய பழக்கங்களில் முக்கியமான பங்காற்றுகின்றன. ஆனால் நான் எந்தக் குடை பற்றிப் பேசுகிறேன் என்றால், அது கார்த்தும்பிக் குடை, இவை கேரளத்தின் அட்டப்பாடியிலே தயாரிக்கப்படுகின்றன.
இந்த வண்ணமயமான குடைகள் மிகவும் அருமையாக இருக்கின்றன. இவற்றின் விசேஷம் என்னவென்றால், இவை கேரளத்தின் நமது பழங்குடியின சகோதர சகோதரிகளால் தயாரிக்கப்படுகிறது என்பது தான். இன்று நாடெங்கிலும் இந்தக் குடைகளின் தேவை அதிகரித்து வருகிறது. இவை இணையம்வழியும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தக் குடைகளை வட்டாலக்கி கூட்டுறவு வேளாண் அமைப்பின் மேற்பார்வையில் தயாரிக்கிறார்கள்.
இந்த அமைப்பின் தலைமை, நமது பெண்களிடம் தான் இருக்கிறது. பெண்களின் தலைமையில் அட்டப்பாடியின் பழங்குடியினச் சமூகமானது, தொழில்முனைவின் அற்புதமான எடுத்துக்காட்டை முன்வைத்திருக்கிறது.
தங்களுடைய குடைகளையும், இன்னும் பிற பொருட்களையும் விற்பனை செய்வது மட்டுமல்ல, தங்களுடைய பாரம்பரியம், தங்களுடைய கலாச்சாரம் ஆகியவற்றையும் உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது என்பதே உள்ளார்ந்த விஷயம்.
இன்று கார்த்தும்பி குடைகள், கேரளத்தின் சின்ன கிராமம் தொடங்கி, பன்னாட்டுக் கம்பெனிகள் வரை தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றன. உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்ற நமது கொள்கைக்கு இதை விடச் சிறப்பான வேறு என்ன எடுத்துக்காட்டு இருக்க முடியும்?என்று கூறியுள்ளார்.