அரசியல் தலையீடுகளால் குழப்பப்படும் விசாரணைகள்: அச்சத்தில் பாடசாலையின் பழைய மாணவர்கள்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் மீதான ஊழல் மோசடிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் புதிய விசாரணைகள் தொடர்பில் பழைய மாணவர்களிடையே அச்சம் நிலவி வருகின்றது.
நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்த ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மையினை ஆராய்ந்து கொள்ள புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகள் கல்வித்துறை சாராத உயரதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகிற போதும் அந்த விசாரணைகளும் அரசியல் தலையீடுகளால் குழப்பப்படலாம் என அச்சப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இடைநிறுத்தப்பட்ட விசாரணை
துணுக்காய் வலயக் கல்விப் பணிமணையினால் மேற்கொள்ளப்பட்டிருந்த விசாரணையின் முடிவுகள் அடிப்படையிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு வடமாகாண கல்வித் திணைக்களம் தயாராகிக்கொண்டிருந்தது.
அரசியல் தலையீடுகளால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாக மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதை வடமாகாண கல்வித் திணைக்களம் கைவிட்டு விட்டதாக பழைய மாணவர் சங்கம் செயலாளர் குறிப்பிட்டிருந்ததும் இங்கே நோக்கத்தக்கது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட பாடசாலையின் நலன் சார்ந்து இயங்கும் சமூகத்தினால் உரிய தரப்புக்களிடம் வழங்கி வந்த தொடர்ச்சியான கோரிக்கைகள் காரணமாக கல்விப் புலம் சாராத விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்படும் குற்றச்சாட்டுக்களுக்காக மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
குழப்பிய அரசியல் கட்சி
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் வளர்ச்சி நோக்கிய அதன் எதிர்காலத்தினை பாதிக்க கூடியதாக அமைந்துவிடும் ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்துவதோடு மேற்கொண்டு அவ்வாறான ஒரு மோசடி மீண்டும் நடைபெறாது இருப்பதற்காகவே இந்த நடவடிக்கைகளை கோரியிருப்பதாக பாடசாலையின் சமூகம் சார்ந்தோர் இடையே மேற்கொண்ட உரையாடலின் போது அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
ஆரம்பக்கட்ட வலயக்கல்வி மட்டத்திலான விசாரணைகளின் தொடர் நகர்வினை மாகாண மட்டத்தில் தடுத்து நிறுத்தியது ஒரு அரசியல் கட்சியின் தலையீடே என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
தமிழ் தேசியத்தின் மீது அதீத பற்றுறுதியோடு இருப்பதாக காட்டிக்கொள்ளும் அந்த தமிழ் அரசியல் கட்சி தமிழர் நலன் சார்ந்து செயற்படுவதாக முன்னெடுக்கும் அதிகமான நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படுவதோடு அவை தொடர்பிலும் பரபரப்பான செய்திகள் பரவி வருவதையும் இங்கே சுட்டிக் காட்டலாம்.
உண்மையிலேயே தமிழர் நலன் கருதி செயற்படுவதாக இருந்தால் ஒட்டுசுட்டான் மாகவித்தியாலய அதிபருக்கெதிராக எடுக்கவிருந்த நடவடிக்கைகளை ஏன் அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என பாடசாலைச் சமூகம் சார்ந்த ஆர்வலர் ஒருவர் கேள்வி எழுப்புவதும் நோக்கத்தக்கது.
புலம் பெயர் பழைய மாணவர்
புலம் பெயர்ந்து வாழ்ந்து வருபவரும் பாடசாலையின் வளர்ச்சியில் பங்கெடுத்து வருபவருமான ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒருவர் தன் ஆதங்கத்தினை கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
பல பிரிவுகளால் பலதரப்பட்ட வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இடைநடுவில் ஐந்து சதத்திற்கும் பெறுமதியற்ற அரசியல்வாதி எவனாவது புகுந்து இந்த விசாரணைகளைப் “புஸ்வாணம்” ஆக்குவானா? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
பாடசாலையின் எதிர்காலத்திற்கும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் வந்த சாபக்கேடு ஒழிந்து ஒரு நல்ல விமோசனம் கிடைக்குமா? என்பதுதான் பலரின் எதிர்பார்ப்புகள்.
கண்ட கண்ட அரசியல்வாதிகளின் வாலைப்பிடித்துக் கொண்டு சமூகத்தில் தன்னை ஒரு செல்வாக்குள்ள ஆளாகக் காட்டிக்கொண்டு திருடுவதை தொழிலாகக் கொண்டுள்ள பல பிரபல திருடர்களுக்கு இந்த விசாரணையானது வயிற்றில் புளியைக் கரைக்க வேண்டும்.
அதற்காக நான் யாரையும் இங்கே திருடர்கள் என்று சொல்லவில்லை. யாரும் திருடாதீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன்.
ஊழல் செய்தாரை விசாரணைகள் வஞ்சித்து வாழ்வுதனைச் சிதைத்துவிடும்.