18 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணன்-தங்கையை சேர்த்த ரீல்ஸ் – உதவிய உடைந்த பல்!
தொலைந்த அண்ணனை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் தங்கை கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொலைந்த அண்ணன்
உத்தர பிரதேசத்தின் பதேபூர் மாவட்டம், இனியாத்பூரை சேர்ந்த தம்பதியினர் சன்யாலி – ராம்காளி. இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இதனிடையே கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் மூத்த மகன் பால்கோவிந்த் (15 வயதில்) என்பவர் வேலைக்காக மும்பை சென்றார்.
அவரோடு நண்பர்கள், உறவினர்கள் என பலரும் சென்றிருந்தனர். இதனையடுத்து சில மாதங்களுக்குப் பிறகு அனைவரும் ஊருக்கு திரும்பும்போது, பால்கோவிந்த் தவறுதலாக வேறு ரயிலில் ஏறி ராஜஸ்தான் சென்று விட்டார்.
அவரால் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு போதிய பணம் இல்லாததால் அங்கேயே தங்கி கிடைத்த வேலைகளை செய்து வனத்துள்ளார். மேலும், அங்கு ஒரு பெண்ணையும் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். பால்கோவிந்த் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
உடைந்த பல்
இந்நிலையில் பால்கோவிந்தின் வீடியோக்களை அவரது தங்கை ராஜ்குமாரி என்பவர் சமீபத்தில் பார்த்துள்ளார். பால்கோவிந்த் சிறுவனாக இருக்கும்போது அவரது முன்பகுதி பல் உடைந்தது.
அந்த உடைந்த பல் மற்றும் முகத்தோற்றத்தை வைத்து, அவர்தான் தொலைந்துபோன அண்ணன் என்பதை ராஜ்குமாரி உறுதி செய்தார். குடும்பத்தினரும் அவரை அடையாளம் கண்டுபிடித்தனர். இதனையடுத்து இன்ஸ்டாகிராம் மூலம் அவரது செல்போன் எண்ணை பெற்ற ராஜ்குமாரி வீடியோ காலில் தொடர்பு கொண்டார்.
அப்போது தனது தங்கையையும் குடும்பத்தினரையும் அடையாளம் கண்ட பால்கோவிந்த் வீடியோ காலில் கதறி அழுதார். இதனை தொடர்ந்து தனது தங்கை ராஜ்குமாரியையும் உறவினர்களையும் அவர் சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.