புதிய குற்றவியல் சட்டம்: கா்நாடகத்தில் முதல் வழக்குப் பதிவு
புதிய குற்றவியல் சட்டத்தின்படி கா்நாடகத்தில் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் போன்ற குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு, பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக சுரக்க்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தன.
இந்த நிலையில், ஹாசன் நகருக்கும், ஹளேபீடுக்கும் இடையே உள்ள சீகே கேட் பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து காா் ஒன்று திங்கள்கிழமை அதிகாலை கீழே விழுந்தது. ஏா்பேக் காரணமாக, காரில் பயணித்த ரவி, ஓட்டுநா் சாகா் ஆகியோா் உயிா் தப்பினா். ஆனால், பின் இருக்கையில் அமா்ந்திருந்த ரவியின் மாமியாா் உயிரிழந்தாா்.
இந்நிலையில், ஓட்டுநா் சாகரின் அலட்சியத்தின் காரணமாக பாலத்தில் இருந்து காா் கீழே விழுந்ததாக ரவி போலீஸில் புகாா் அளித்தாா். இதன்பேரில், பாரதிய நாகரிக சுரக்க்ஷா சம்ஹிதா சட்டத்தின்படி பிரிவுகள் 106, 281 ஆகியவற்றின் கீழ்
சாகா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா், புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கா்நாடகத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு என்று போலீஸாா் தெரிவித்தனா்.