;
Athirady Tamil News

சுவாமி படங்களை அகற்றிய யாழ்.வலய கல்வி பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

0

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிமனையில் இருந்த சைவக்கடவுள்களின் திருவுருவப்படங்களை அகற்றிய கல்விப் பணிப்பாளர் பிறட்லீயை உடனடியாக யாழ் கல்வி வலயத்தில் இருந்து வெளியேற்றுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிவசேனையின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண வலையக் கல்விப் பணிப்பாளராக கடந்த வாரம் பொறுப்பேற்ற பிரட்லீ தனது அலுவலகத்தில் இருந்த சைவக்கடவுள்களின் திருவுருவ படங்களை அகற்றினார்.

சுவாமி படங்கள் அகற்றப்பட்டமை அலுவலகத்தில் கடமையில் இருந்த இந்து சமய உத்தியோகஸ்தர்களிடையே கடும் அதிருப்தி நிலை காணப்பட்டதுடன் சர்ச்சைகளையும் ஏற்படுத்தின.

அது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்திய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுவாமி படங்களை மீள உரிய இடங்களில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையிலையே சிவசேனை அமைப்பினர் வலய கல்வி பணிப்பாளரை யாழ்.கல்வி வலயத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

கடமையாற்ற வந்த உடனேயே இவர் நடந்து கொண்டதிலிருந்து, இப்படிப்பட்ட மதவாத சிந்தனை உடைய இவரினால் நேர்மையானதொரு சேவையினை யாழ் கல்விப் புலத்திற்கு வழங்க முடியாது என்பது தெளிவாகவே புலப்படுகிறது.

இவரினால் இந்து மாணவர்கள், இந்து ஆசிரியர்கள், இந்து பாடசாலைகள் என்று பலதரப்பு பல வகையினில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் வாய்ப்பும் அதிகளவிலேயே உள்ளது.

அவரது மதவாத மனநிலை சார்ந்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு, இடமாற்றத்தோடு கூடிய தகுந்த தண்டனையும் வழங்கப்படவேண்டும்.

இந்துக்கடவுள்களினை அவமதித்ததனால் உலக இந்து மக்களிடம் முறையாக ஊடகங்கள் வாயிலாக பொது மன்னிப்பும் கேட்கவேண்டும் – என சிவசேனையினர் கோரியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.