அதிகாரத்தின் வாசலில் தீவிர வலதுசாரிகள்… எச்சரிக்கும் பிரான்ஸ் பிரதமர் அட்டல்
ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றத் துடிக்கும் தீவிர வலதுசாரிகளை தடுத்து நிறுத்த வேண்டிய தார்மீக கடமை ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் உண்டு என மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல்.
அதிகாரத்தின் வாசலில் இருப்பதாக
பிரான்சில் முதல் சுற்று தேர்தல் முடிவடைந்த நிலையில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. Marine Le Pen வழிநடத்தும் தீவிர வலதுசாரிக் கட்சி 33 சதவிகித வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது.
இதனையடுத்து பாரீஸ் தெருக்களில் வன்முறை வெடித்துள்ளது. கடைகளின் ஜன்னல்களை உடைத்தும், குப்பைகளை கொளுத்தியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, கலவரத் தடுப்பு பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் இடையே மோதலும் உருவானது. National Rally கட்சி ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றும் நிலையை எட்டியுள்ளது என்ற தகவலே மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில், National Rally கட்சி அதிகாரத்தின் வாசலில் இருப்பதாக எச்சரித்துள்ள பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல், கட்சிகள் ஒன்றிணைந்து தீவிர வலதுசாரிகள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவதை தடுத்த நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
எதிர்வரும் ஞாயிறன்று நடக்கும் இரண்டாவது சுற்றிலும், National Rally கட்சியே முன்னிலை பெறும் என கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டினாலும், ஆட்சியை கைப்பற்றும் 289 ஆசனங்களை அவர்களால் பெற முடியாது என்றே குறிப்பிட்டுள்ளனர்.
காவல்துறைக்கு மிருக பலம்
இதனால், National Rally கட்சி ஆட்சி அமைப்பதை தடுக்க முடியும் என்றும் எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. மேலும், மூன்றாவது இடத்தில் இருக்கும் வேட்பாளர்கள் தேர்தலில் நீடிக்காமல் உடனடியாக வில வேண்டும் என்றும் கேப்ரியல் அட்டல் தமது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் நேற்று மட்டும் 169 வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர். National Rally கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றால் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிரான்சில் ஆட்சியை கைப்பற்றும் தீவிர வலதுசாரிக் கட்சி என அறியப்படும்.
மட்டுமின்றி, 28 வயதான Jordan Bardella நாட்டின் பிரதமராக பொறுப்புக்கு வருவார். இனவாதத்தை ஆதரிக்கும் National Rally கட்சி ஆட்சிக்கு வரும் என்றால், புலம்பெயர்தல் மற்றும் குடியேறுவதை மொத்தமாக ஒழிக்கும், அத்துடன் காவல்துறைக்கு மிருக பலத்தை அளிக்கும் என்றே கூறி வருகின்றனர்.
மேலும், தங்கள் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மையை வழங்குக என்றே Jordan Bardella வாக்காளர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.