சிட்னி பல்கலைக்கழக வளாகத்தில் சிறுவனின் வெறிச்செயல்: ஆபத்தான நிலையில் ஒருவர்
சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்தியால் தாக்கிய 14 வயது சிறுவனை கைது செய்ததாக அவுஸ்திரேலிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தில்லை
குறித்த சம்பவத்தை அடுத்து சிட்னி பல்கலைக்கழக வளாகம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர மருத்துவ உதவுக் குழுவினர் 22 வயது இளைஞர் ஒருவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
அவரது நிலை கவலைக்கிடம் என்றாலும், உயிருக்கு ஆபத்தில்லை என்றே கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நியூ சவுத் வேல்ஸ் மாகாண காவல்துறை அறிக்கை ஒன்றில் விளக்கமளித்துள்ளது.
தாக்குதலை அடுத்து, அந்த சிறுவன் பேருந்து ஒன்றில் தப்பியதாகவும், ஆனால் மருத்துவமனை ஒன்றின் அருகாமையில், பொலிசாரால் கைதாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, அப்பகுதி மக்களுக்கு இச்சம்பவத்தால் அச்சுறுத்தல் இல்லை என்றும், தாக்கிய சிறுவனும் தாக்கப்பட்டவருக்கும் தொடர்பில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வளாகம் மூடப்பட்டிருக்கும்
நடந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழக வளாகத்தில் பொலிசார் விசாரித்து வருவதாகவும், வளாகம் அதுவரை மூடப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சிட்னியின் போண்டி பகுதியில் உள்ள கடற்கரையோர வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டு 12 பேர் காயமடைந்து சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது.
மேலும், சிட்னியின் மேற்கில் அசிரிய தேவாலய பிஷப் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்தார். இந்த விவகாரத்தில் 16 வயது சிறுவன் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நிலையில், வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல்தாரி பொலிசாரால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.