ஆங்கிலம் பேசத் தெரியாதா? குழந்தைகள் உட்பட புலம்பெயர் குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்ட நபர்
குழந்தைகள் உட்பட புலம்பெயர் குடும்பம் ஒன்றை துப்பாக்கியால் சுட்ட ஒருவர், தன்னைத்தான் சுட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
புலம்பெயர் குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்ட நபர்
புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் உட்பட, ஏழு பேர் அமெரிக்கர் ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்கள்.
வெள்ளிக்கிழமை மாலை 4.43 மணியளவில், அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்திலுள்ள Crete நகரிலுள்ள ஒரு வீட்டில் வாழ்ந்துவந்த ஸ்பெயின் நாட்டவர்கள் ஏழு பேர் அமெரிக்கர் ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்கள்.
சுடப்பட்டவர்களில் நான்கு பேர் 3 முதல் 10 வயதுவரையுள்ள பிள்ளைகள், மூன்று பேர், 22 முதல் 43 வயது வரையுள்ள பெரியவர்கள்.
பொலிசார் வந்த பின்பு கேட்ட சத்தம்
தகவலறிந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில், சம்பவம் நடந்த வீட்டிற்கு எதிரே உள்ள ஒரு வீட்டிலிருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக பொலிசார் அங்கு விரைய, அந்த வீட்டிற்குள் பில்லி பூத் (Billy Booth, 74) என்னும் நபர் உயிரிழந்து கிடந்துள்ளார். அவர்தான் அவரது எதிர்வீட்டில் வாழ்ந்த குடும்பத்தை துப்பாக்கியால் சுட்டவர். அவர் தன்னைத்தான் சுட்டுக்கொண்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
என்ன காரணம்?
பில்லி, அந்த குடும்பத்தினரைப் பார்த்து, ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றும், உங்கள் நாட்டுக்குத் திரும்ப் போங்கள் என்றும் சத்தமிடுவதுண்டாம்.
ஆகவே, இது இனவெறுப்பால் நிகழ்ந்த தாக்குதலாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையில், சுடப்பட்ட யாருக்குமே உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், அவர்களில் சிலர் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பிவிட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.